11,12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியின் போது நியமிக்கப்படும் ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை அரசுத் தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.அதில் "அரசுத் தேர்வுகள் இயக்குநரால் வழங்கப்பட்ட கால அட்டவணைப்படி உரிய தேதியில் முகாம் அலுவலர், தொடர்பு அலுவலர்கள் பொறுப்பேற்க வேண்டும். முகாம் அமையும் பள்ளிகளில் தடைசெய்யப்பட்ட பகுதிஎன்ற வாசகங்கள் நன்கு தெரியும்படி ஒட்டப்பட வேண்டும்.
முகாம் தொடர்பான விடைத்தாள் மதிப்பீட்டு பணி மற்றும் பிற பணிகளுக்குத் நம்பிக்கைக்குரிய, நேர்மையான, எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத ஆசிரியர், பணியாளர்களை நியமனம் செய்து, நியமன ஆணையினை வழங்க வேண்டும். விடைத்தாள் மதிப்பீடு செய்ய காற்றோட்டமான அறைகளைத் தேர்வுசெய்ய வேண்டும்.
முகாமில் பணிபுரியும் அனைத்து நிலைப் பணியாளர்களும் கண்டிப்பாக அடையாள அட்டை அணிய வேண்டும். மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர், அட்டவணையாளர் மற்றும் முகாம் எழுத்தர் போன்ற பிற பணியாளர்கள் விடைத்தாள் மதிப்பீடு நடைபெறும் அறைக்குச் செல்லக்கூடாது.
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியானது அரசுத் தேர்வுத் துறை இயக்ககத்தால் வரையறுக்கப்பட்ட கால இடைவெளிக்கு முன்னர் நிறைவு பெற்றால்ஆசிரியர், பணியாளர்களை உடனடியாக உரிய வருகைச் சான்றிதழுடன் முறையாக பணி விடுவிப்பு செய்துவிட வேண்டும்.
மதிப்பீடு செய்யப்பட்ட 11,12ஆம் வகுப்புவிடைத்தாள்கள் தேர்வு முடிவு வெளியிடப்பட்டதிலிருந்து மூன்று மாதங்கள் வரை முகாமிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். அந்தகால இடைவெளிக்குள் விடைத்தாள்களை முகாமிலிருந்து வேறு எந்த பள்ளிகளுக்கும் மாற்றம் செய்யக் கூடாது.
அதை மாற்றம் செய்வதற்கான அதிகாரம் அரசுத் தேர்வுகள் இயக்குநர் தவிர வேறு யாருக்கும் கிடையாது. விடைத்தாள்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய முழுப்பொறுப்பும் முகாம் அலுவலர்தான் ஏற்க வேண்டும்.
மேலும் பாடவாரியாக, மொழிவாரியாக பெறப்பட்ட விடைத்தாள்களின் எண்ணிக்கையினை உடனடியாக ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி மற்றும் கணினியில் மதிப்பெண் ஏற்றப்பட்ட விடைத்தாள்கள், முகாம் அலுவலர் பாடவரியாக, கட்டு எண்ணிக்கை வாரியாக அடுக்கி பாதுகாக்கப்பட வேண்டும்.
முகாம் அலுவலர் தனது முகாமிற்கு பெறப்பட்டுள்ள பாடவாரியான விடைத்தாள்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான முதன்மைத் தேர்வாளர்கள் (விடைத்தாள் திருத்தியதில் அனுபவம் வாய்ந்த மூத்த முதுகலை ஆசிரியர்), கூர்ந்தாய்வு அலுவலர்கள் (மூத்த முதுகலை ஆசிரியர்), உதவித்தேர்வாளர்களுக்கான நியமனம் செய்துள்ளதை உறுதிசெய்ய வேண்டும்.