வருமான வரித்துறையினர் நாடு முழுவதும் எதிர்க்கட்சியினரது வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனர். இதற்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். இதனை எதிர்த்து மேற்குவங்கம், கர்நாடகா, ஆந்திர முதலமைச்சர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் சோதனை என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தால் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுகின்றனர்.
ஏற்கனவே வேலூர் தொகுதியில் தேர்தல் ஆணையம் ஜனநாயகத்திற்கு விரோதமாக ஆளுங்கட்சிகளின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில் தேர்தலை ரத்து செய்துள்ளது. இதனுடைய அடுத்தக்கட்டமாக நேற்று (16.04.2019) இரவு 8 மணிக்கு திமுக வேட்பாளர் கவிஞர் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை என்ற பெயரில் அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கரூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் தேர்தலை ரத்து செய்து விடுவோம் என மிரட்டியுள்ளார். இதற்கு முன்பு தூத்துக்குடியில் அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டிலும் சோதனை நடத்தியுள்ளனர். இவ்வாறு மாறி, மாறி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கட்சியை சார்ந்தவர்களின் வீடுகளில் சோதனை நடத்துகின்றனர்.
ஆளுங்கட்சி வேட்பாளர்களை பண விநியோகம் செய்வதற்கு தாராளமாக அனுமதித்து விட்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை சோதனை என்ற பெயரில் தேர்தல் பணிகளை முடக்குவதும், மக்கள் மத்தியில் அவதூறு பிரச்சாரத்திற்கு வழிசெய்யும் வகையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருவது பாராபட்சமான செயல் மட்டுமல்ல, வன்மையான கண்டனத்திற்குரியது.
அதிமுக-பாஜக தேர்தல் ஆணையத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி, இத்தகைய மோசமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் தோல்வி பயத்தால் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு என்றே கவிஞர் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது’ என அந்த அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.