தமிழ்நாடு புதுச்சேரியில் நடைபெற்ற 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மொத்தமாக 95 சதவிகித மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இந்த தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்காக சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில்சிறப்பு துணைத் தேர்வினை எழுத விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்களுக்காக அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
11ஆம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
சென்னை : 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு துணைத் தேர்வினை எழுதுவதற்கு நாளை முதல் 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
அதில், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் 14.6.2019 முதல் 21.6.2019 வரை நடைபெறவிருக்கும் சிறப்புத் துணைத் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள், தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று 10.5.2019 முதல் 14.5.2019 வரை ஆன் லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும், தனியார் இணையதள சேவை மையங்களின் மூலம் விண்ணப்பிக்க இயலாது என்றும் கூறப்பட்டுள்ளது. தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டிய நாட்கள் குறித்தான விவரம் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.