அரியலூர்: திருச்சி - சிதம்பரம் நெடுஞ்சாலை, கீழப்பழுவூர் - தஞ்சாவூர் சாலை ஆகியவை சந்திக்கும் ஜங்ஷன் அருகே கீழப்பழுவூர் காவல் நிலையம் இயங்கி வந்தது. ஆங்கிலேயர் காலத்தில் சாதாரண ஓட்டுக் கட்டிடத்தில் கட்டப்பட்ட இந்த காவல் நிலையம் சமீப காலம் வரை இயங்கி வந்த இந்த காவல் நிலையம், தற்போது வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே புதிய இடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
இதையடுத்து பழைய காவல் நிலையம் கைவிடப்பட்டு பெயரளவுக்கு மட்டும் பயன்பாட்டில் காவல்துறை வசம் இருந்து வருகிறது. இந்த பழைய காவல் நிலையத்தில் காவல்துறை வாகனங்கள் நிறுத்துவது, சாலை சந்திப்பில் போக்குவரத்து பணியில் இருக்கும் காவலர்கள் உடைமாற்றம் செய்வது போன்ற சிறு பணிகளுக்கு மட்டும் இந்த இடம் பயன்பாட்டில் உள்ளது. காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென உள்ளே புகுந்த சிலர் தங்களது ஆடு, மாடுகளை கட்டி இடத்தை ஆக்கிரமிப்பு செய்தனர்.
அதனுடன் அருகில் உள்ள கோயிலுக்கு அன்னதானம் என்று கூறி சமையலும் செய்யத் தொடங்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை உடனடியாக காலி செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் இடத்தை காலி செய்யவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் குமார் என்பவர் தனது நண்பர்களோடு சேர்ந்து இடத்தை ஆக்கிரமித்ததும், அவர் சமூக ஆர்வலர் மற்றும் சிவனடியார் என்பதும் இறை வழிபாடு நடத்துபவர் என்று தெரியவந்தது.
இதனையடுத்து அங்கு அதிரடியாக களம் இறங்கிய போலீசார் போலீஸ் படையோடு வந்து ஆக்கிரமிப்பாளர்களை விரட்ட தொடங்கினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தை கார்த்திக் குமாரின் நண்பர்கள் வீடியோ எடுத்தனர். இதை பார்த்த போலீசார் வீடியோ எடுப்பதை தடுத்தனர். அப்போது விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் போலீசாருடன் சண்டையிட்டனர். அந்த நிர்வாகிகள், காவல் நிலையம் அமைந்துள்ள இடத்தின் பெரும்பாலான பகுதி இந்து கோயிலை சேர்ந்தது எனவும், காவல் நிலையத்தில் இரண்டு பக்கமும் கோயில்கள் உள்ளன. காவல் நிலையம் இருக்கும் இடமே கோயிலுக்கு சொந்தமான இடம் தான் என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து காவல்துறை உயர் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதிகாரிகளை சந்தித்த கார்த்திக் குமார் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள், மேற்படி காவல் நிலையம் இருக்கும் இடம் கோயில்களுக்கு சொந்தமானது எனவும், இடத்தை உடனே அவர்கள் காலி செய்ய வேண்டும் என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைக் கேட்ட வருவாய் துறை அதிகாரிகள், மேற்படி இடம் காவல்துறைக்கு சொந்தமான இடம். கோவிலுக்கு சொந்தமான இடம் என்றால் உரிய ஆவணங்களை எடுத்து வாருங்கள். கோயில் சொந்தமானது என்று தெரிந்தால் உடனே உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரம் தற்போது இந்த இடம் காவல்துறை பயன்பாட்டில் உள்ளது. எனவே இந்த இடத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஆடு, மாடு கட்டுவது, போன்ற எந்த செயல்பாடும் செய்யக்கூடாது என்று கடுமையாக எச்சரித்தனர்.
இதைக் கேட்ட விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் போலீசார் அராஜக போக்கில் நடந்து கொள்கின்றனர் என்று முறையிட்டனர். அப்போது பேசிய சிலர், போலீஸ் இன்ஸ்பெக்டர் மாற்று மதத்தை சேர்ந்தவர். எனவே சிவனடியார் தவம் செய்வது, அன்னதானம் செய்வது, போன்ற செயல்களை தடுக்கும் நோக்கத்தில் இவ்வாறு செயல்படுகிறார். இரு மதங்களுக்கு இடையே பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் இன்ஸ்பெக்டர் நடந்து கொள்கிறார் என்று கூறினர்.