1. பள்ளிகள் திறப்பு
600 நாள்கள் கழித்து இன்று 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படுவதால், மாணவர்களை வரவேற்கச் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
2. வன்னியர் 10.5 இட ஒதுக்கீடு வழக்குத் தீர்ப்பு!
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்குகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இன்று (நவம்பர் 01) தீர்ப்பளிக்க உள்ளது.
3. கோயம்புத்தூர் - வேளாண் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்தில் இன்று (நவ.1) காலை 10.30 மணிக்கு 42 ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக அரங்கில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கலந்து கொள்ள உள்ளனர்.
4. வேளச்சேரி, கோயம்பேடு - மேம்பாலங்கள் திறப்பு
வேளச்சேரி, கோயம்பேடு பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலங்களை இன்று (நவ.1) முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு, திறந்து வைக்க உள்ளார்.
5.'விடுதலைப் போரில் தமிழகம்' -ஸ்டாலின்
கண்காட்சி திறக்கும் ஸ்டாலின் 'விடுதலைப் போரில் தமிழகம்' என்ற புகைப்படக் கண்காட்சி மற்றும் கப்பலோட்டிய தமிழன் வஉசியின் வாழ்க்கை வரலாறு குறித்து அரசுப் பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (நவ. 1) தொடங்கி வைக்கவுள்ளார்.
6. தமிழ்நாட்டின் மழை நிலவரம்
குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகத் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கன மழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.