அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் உள்ளது சோழமாதேவி கிராமம். இங்கு 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மண்பாண்டம் செய்யும்தொழிலை பாரம்பரியத் தொழிலாக கொண்டுள்ளனர்.
இவர்கள் மண்பானை, சட்டி, அடுப்பு, அகல் விளக்குகள் உள்ளிட்ட பொருள்களை உற்பத்திசெய்து மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்துவருகின்றனர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் (தீநுண்மி) அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மூன்றாம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளதால், தங்களது வாழ்வாதாரத்தினை முழுவதும் இழந்துதவிக்கின்றனர்.
கோடைகாலங்களில் மக்கள் வெப்பத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளவும், குளிர்ந்த நீர் பருகவும் பானைகளை வாங்குவது வழக்கம். அதுமட்டுமின்றி அரசியல் பிரமுகர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் கோடைகாலத்தில் நீர்மோர் பந்தல் அமைக்க மண்பானைகளை மொத்தமாக வாங்கிச் செல்வர்.
ஆனால் தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டே வருவதால் தங்களில் வியாபாரம் முற்றிலுமாக முடங்கியுள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர் இவர்கள்.
இதனால் முன்னதாகவே செய்துவைத்திருந்த மண்பாண்டங்களும் விற்பனைக்கு அனுப்ப முடியாமலும், வழக்கமாக விற்பனை செய்யப்பட்டுவரும் பானைகளும் விற்கப்படாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மண்பாண்டத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு அரசு உரிய இழப்பீடும், நிவாரணங்களும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளனர். மேலும், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட அரசு இடங்களிலும், மக்கள் அதிகம் கூடுமிடங்களிலும் மண்பாண்டங்களில் தண்ணீர் வைத்து தங்களுக்கு உதவ வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். அரசு இவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்குமா எனப் பொருத்திருந்து காணலாம்.