‘நீரின்றி அமையாது உலகு’ என்கிறார் ஐயன் வள்ளுவன். அப்படி ஐயனின் வாக்குப்படிப் பார்த்தால் நீர் இல்லாமல் இவ்வுலகமே இயங்காதெனில், இவ்வுலகில் வாழும் உயிர்கள் எப்படி வாழ முடியும் நீரின்றி. உலகம் உயிர்ப்புற்று விளங்க அடிப்படை ஆதாரமாக இருப்பது நீராகும்.
மனிதர்கள் உணவு உண்ணாமல் கூட இருந்திட இயலும். நீரினைப் பருகாமல் இருப்பது என்பது எளிதான செயல் அல்ல. உலகம் உய்யவும், உயிர்கள் வாழவும் மிகமிக அவசியம் நல்ல தண்ணீர் தேவையாகும்.
அப்படி தண்ணீரின் தேவையை உணர்ந்த ஊராட்சி ஒன்று நீரை வடிக்கட்டி நன்னீராக வழங்குகிறது.
அரியலூர் மாவட்டம் வெங்கட கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் சுமார் 325 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெரும்பான்மையான மக்கள் விவசாய குடிமக்கள் என்பதால் மினரல் வாட்டர் வாங்குவதற்கு எல்லாம் போதிய வருமானம் இல்லை. அதனால் அம்மக்கள் குடிப்பதற்கு முன்பு அடிபம்பை மட்டுமே நம்பியுள்ளனர். இதனை உணர்ந்த வெங்கட கிருஷ்ணாபுரம் ஊராட்சி, வெறும் இரண்டு ரூபாய்க்கு தற்போது மினரல் வாட்டரை வழங்கி வருகிறதாம்.
இதுகுறித்து அவரின் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளியம்மை கூறுகையில், தான் வீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குடிப்பதுபோல் இவ்வூர் மக்களும் குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தபோது, அரசு ஊராட்சியில் தூய குடிநீர் வழங்குவதை ஊக்கப்படுத்தியது. அதனைத் தனது ஊராட்சியில் செயல்படுத்த வேண்டும் என அலுவலர்களிடம் போராடி எட்டு லட்சம் மதிப்பீட்டில் இத்திட்டத்தை பொதுமக்களுக்காக பெற்றுத் தந்ததாக தெரிவித்தார்.