அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் எதிரே அகில இந்திய மக்கள் சேவை சங்கத்தினர் கோலமாவைக் கொண்டு இந்திய வரைபடத்தை வரைந்து, அதன் நான்கு திசைகளிலும் மூலைக்கு ஒன்று வீதம் நான்கு குழந்தைகளை அமரவைத்தனர்.
அப்போது, பஞ்ச பூதங்களைக் குறிக்கும்வகையில் ஐந்து குத்து விளக்கினை ஏற்றி இந்தியா கரோனா பாதிப்பிலிருந்து விரைவில் நலம்பெற வேண்டும் என இயற்கை அன்னையிடம் வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கரோனா பாதிப்பிலிருந்து விடுபட வழிபாடு செய்பவர்கள் இதில், பொதுமக்களைக் காக்க அன்றாடம் உணவு உற்பத்திசெய்யும் விவசாயிகள் நலம் பெற வேண்டும். இரவு, பகலாக அர்ப்பணிப்போடு பணிபுரியும் காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர், அரசு அலுவலர்கள், ஊடக நண்பர்கள், தன்னார்வலர்கள், இயற்கை செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், விவசாய கூலித்தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் உதவிகள் செய்யும் அனைவரும் நலமாக வாழ வேண்டும் என இயற்கை அன்னையிடம் வழிபாடு செய்தனர். மேலும் வழிபாட்டின்போது சமூக இடைவெளி கடைப்பிடிக்கபட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கரூரில் கரோனா வைரசை முறியடிக்க விநோத வழிபாடு