அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பெரியாகுறிச்சி பஞ்சாயத்துக்குள்பட்ட இலைக்கடம்பூர் உள்ளிட்ட கிராமங்களில் அடிதடி, திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்துவருகின்றன. அதைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் கிராமங்களின் முக்கிய இடங்களில் கண்காணிப்புப் படக்கருவிகளைப் பொருத்துமாறு கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா ஒப்புதலோடு செந்துறை ஒன்றியக்குழுத் தலைவர் தேன்மொழி சாமிதுரை ஒன்றியப் பொதுநிதியிலிருந்து 12 லட்சம் ரூபாய் செலவில் 44 கண்காணிப்புப் படக்கருவிகளைப் பொருத்த திட்டமிட்டார்.
அதன்படி பஞ்சாயத்தில் உள்ள முக்கிய வீதிகள், பொது இடங்களில் கண்காணிப்புப் படக்கருவிகள் பொருத்தப்பட்டன. இலைக்கடம்பூர் காலனி தெருவில் பொருத்தப்பட்ட கண்காணிப்புப் படக்கருவிகள் தொடக்க விழா அரசுப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் கோகிலா அழகுதுரை தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அரியலூர் மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் கலந்துகொண்டு கண்காணிப்புப் படக்கருவிகளைத் தொடங்கிவைத்தார்.