கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் மிகவும் உயரிய தொடராக கருதப்படுவது விம்பிள்டன் தொடராகும். 1877இல் இருந்து லண்டனில் பாரம்பரிமாக இந்தத் தொடர் ஆண்டுதோறும் ஜூன் முதல் ஜூலை வரை நடைபெற்றுவருகிறது. கிட்டத்தட்ட டெனிஸ் போட்டிகளில் இது உலகக்கோப்பை தொடராகத்தான் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான விம்பிள்டன் தொடர் ஜூன் 29 முதல் ஜூலை 12வரை நடைபெறவுள்ளது. ஆனால், உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கோவிட் -19 தொற்றால் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், விம்பிள்டன் தொடர் ரத்தாக வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து ஜெர்மனி டென்னிஸ் சம்மேளனத்தின் துணைத் தலைவர் டிர்க் ஹோர்டோர்ஃப் கூறுகையில், "இந்தத் தொடர் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் அடுத்த வாரம் புதன்கிழமை நடைபெறவுள்ளது. அதில், விம்பிள்டன் தொடர் நடைபெறுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும். என்னை பொறுத்தவரையில் தற்போதைய சூழலில் இந்தத் தொடர் ரத்து செய்வதற்கான வாய்ப்புகளே அதிகம்" என்றார்.