கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் தொடர் உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் தொடர்களில் ஒன்றாகும். 2019ஆம் ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் இறுதி போட்டிக்கு நட்சத்திர ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலை எதிர்த்து ஆஸ்திரிய வீரர் டாமினிக் தீம் ஆடினார்.
இப்போட்டி ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், களிமண் தரையில் இரு வீரர்களும் களமிறங்கினர். ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஒவ்வொரு சர்வ்களுக்கும் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைத் தொட்டது. முதல் செட் ஆட்டத்தின் இரு வீரர்களும் தங்களது முழுமையான திறனையும் வெளிப்படுத்தினர். முதல் செட் ஆட்டத்தின் தொடக்கத்தில் அபாரமாக ஆடி 3-2 என்ற புள்ளிகளில் தீம் முன்னிலை பெற, தனது தனித்துவமான ஃபோர்ஹேண்ட் ஷாட்களால் முன்னிலைப் பெற்று, முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றினார்.
இதனையடுத்து நடைபெற்ற இரண்டாது செட் ஆட்டம் ரசிகர்களிடையே மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் டாமினிக் தீமின் மனவலிமையைப் பார்த்து அசந்தனர். நடக்கும் போட்டியில் வெல்லப்போவது களிமண் தரையின் அரசனா அல்லது களிமண் தரையின் இளவரசனா என பேசத் தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாது செட்டைக் கைப்பற்ற டாமினிக் தீம் - நடால் இடையே மிகப்பெரிய போராட்டம் நடந்தது. இரண்டாவது செட்டில் 5-5 என்ற கணக்கில் விளையாட, டாமினிக் தீமின் அதிரடியான தாக்குதல் ஆட்டத்தால் 7-5 என இரண்டாது செட்டைக் கைப்பற்றி நடாலுக்கு பதிலடிக் கொடுத்தார். பின்னர் களிமண் தரையின் அரசன் என பட்டம் வழங்கியதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாய் மூன்றாவது செட்டை 6-1 என நடால் கைப்பற்றி தீமை அசரடித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற நான்காவது செட்டில், நடால் 3-0 என முன்னிலைப் பெற்றார். அடுத்த செட்டில் அதிரடியாக விளையாடி 3-1 என்ற நிலையை தீம் ஏற்படுத்த, ரசிகர்கள் நகம் கடிக்கத் தொடங்கினர். இதனையடுத்து மீண்டும் ஆட்டத்தில் நடாலின் கை ஓங்க, 4-1 என்ற நிலை ஆனது. இதனையடுத்து இரு வீரர்களுக்குமிடையே ஒவ்வொரு புள்ளிகளை பெறவும் மிகப்பெரிய போராட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து நடால் தாக்குதல் ஆட்டத்தையே ஆடி தீமிற்கு நெருக்கடியை ஏற்படுத்தினார்.
கிராஸ் கோர்ட் ஷாட்கள், ஃபோர்ஹேண்ட் ஷாட்கள் என அடுத்தடுத்து ஆடி திணறடிக்க 5-1 என்ற நிலை ஏற்பட்டது. பட்டத்திற்கு அருகில் நடால் சென்றுவிட்டார். அடுத்த புள்ளியை சில வினாடிகளில் கைப்பற்றி பிரெஞ்சு ஓபன் தொடரின் 12ஆவது பட்டத்தை கைப்பற்றினார் ரஃபேல் நடால்.