தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 6, 2020, 1:44 PM IST

ETV Bharat / sports

சிறந்த இளம் வீராங்கனை விருதை தட்டிச்சென்ற கிராமத்துப் பெண்!

2019ஆம் ஆண்டின் சிறந்த இளம் ரக்பி வீராங்கனைக்கான விருதை பிகார் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்வீட்டி குமாரி வென்றுள்ளார்.

Sweety Kuamari
Village girl from Bihar named 'international young player of the year'

பிகார் தலைநகர் பாட்னாவை அடுத்துள்ள நவாடா என்ற கிராமத்தில் வசித்துவருகிறார் இந்திய ரக்பி அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்வீட்டி குமாரி. ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்த இவர், தனது சகோதரரைப் போல முதலில் தடகளத்தில் ஆர்வம் காட்டினார்.

பின் நாள்களில் ரக்பி பயிற்சியாளர் ஒருவரின் ஆலோசனையால் ரக்பி விளையாட்டின் மீது கவனம் செலுத்த தொடங்கினார். தனது 14 வயதில் ரக்பி விளையாட்டு போட்டி பற்றி முழுமையாக தெரிந்ததும், தனக்கான ஒரு அணியை தயார்செய்து மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். இதையடுத்து, மூன்று ஆண்டுகளுக்குப் பின் 17 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய மகளிர் அணியில் இடம்பிடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். இதன் மூலம் இவர் கடந்தாண்டு சீனியர் அணியிலும் இடம்பிடித்து அசத்தினார்.

2019ஆம் ஆண்டு பல நட்சத்திர விளையாட்டு வீராங்கனைகளான பி.வி. சிந்து, ஹிமா தாஸ், மானு பாக்கர் ஆகியோரைப்போல இவருக்கும் சிறந்த ஆண்டாக அமைந்தது. ஏழு பேர் கொண்ட அணி, 15 வீரர்கள் கொண்ட அணி என இரண்டு விதமான ரக்பி போட்டியிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரக்பி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.

அசூர வேகத்தாலும் விவேகத்தாலும் இந்திய அணிக்கு கடந்தாண்டில் அதிக புள்ளிகள் பெற்றுத்தந்த இவரது ஆட்டத்தைப் பார்த்து ஆசிய கண்டத்தின் வேகமான வீராங்கனை என ஆசிய ரக்பி சம்மேளனம் புகழாரம் சூட்டியது. மேலும், சக இந்திய வீராங்கனைகளால் 'ஸ்கோரிங் மெஷின்' என்றும் அழைக்கப்படுகிறார் ஸ்வீட்டி குமாரி.

இந்நிலையில், 2019ஆம் ஆண்டின் மகளிர் ரக்பி போட்டியில் சிறந்த இளம் வீராங்கனைக்கான விருதை வென்றார். மேலும், இந்த விருதுப் பட்டியலில் பரிந்துரைக்கப்பட்ட வீராங்கனைகளிலிருந்து சற்று மாறுபட்டவர் ஸ்வீட்டி குமாரி. இப்பட்டியலில் இடம்பெற்றவர்கள் கிளப் அளவிலான போட்டிகளிலோ, பள்ளி அளவிலான போட்டிகளிலோ பங்கேற்று ரக்பி போட்டியில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

ஆனால், ஸ்வீட்டி குமாரி மட்டுமே தனக்கான ஒரு அணியை தயார் செய்து ரக்பி போட்டியில் பங்கேற்று மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதால்தான், அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது என மகளிர் ரக்பி ட்விட்டர் பக்கமான ஸ்க்கரம்குவியன்ஸ் விளக்கமளித்துள்ளது. ரக்பி போட்டி இந்தியாவில் கவனத்தைப் பெற தொடங்கியுள்ள நிலையில், ஸ்வீட்டி குமாரியின் பெயர் இந்தியா முழுவதும் பிரபலமடைந்துள்ளது.

இதையும் படிங்க:விவசாய பூமியில் விளைந்த இந்தியாவின் தங்க மங்கை ஹிமா தாஸ்!

ABOUT THE AUTHOR

...view details