சர்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனம் சார்பில் ஹங்கேரி ஓபன் டேபிள் டென்னிஸ் தொடர் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்றது. இதில், ஆடவர் இரட்டையர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த இந்திய இணை சத்யன் ஞானசேகரன், சரத் கமல் பங்கேற்றனர்.
தங்களது சிறப்பான ஆட்டத்தால் இந்த இணை, அரையிறுதி போட்டியில் உலகின் முதல் நிலையான ஹாங்காங்கின் வான் கிட் ஹோ - சூன் டிங் வாங் இணையை 11-7, 12-10, 4-11, 4-11, 11-9 என்ற செட் கணக்கில் வீழ்த்தி திரில் வெற்றிபெற்று இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. ஹங்கேரி ஓபன் தொடரில் இந்த இணை இறுதிச் சுற்றுக்குள் நுழைவது இதுவே முதல்முறையாகும்.
இந்நிலையில், நேற்று இரவு நடைபெற்ற இறுதிச் சுற்றில் சத்யன் - சரத் கமல் இணை, ஜெர்மனியின் துடா பெனிடிக் - ஃபிரான்சிஸ்கா பாட்ரிக் (Duda Benedikt - Franziska Patrick) இணையை எதிர்கொண்டது. இதில், 5-11, 9-11, 11-8, 9-11 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்ததால், சத்யன் - சரத் கமல் இணைக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. முன்னதாக, இந்தத் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மணிக்கா பத்ரா - சரத் கமல் இணை வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் ஸ்வீடனில் நடைபெற்ற மகளிர் ஜூனியர் ஒற்றையர் பிரிவுக்கான போட்டியில் சென்னையைச் சேர்ந்த 10 வயது இந்திய வீராங்கனை மதன் ராஜன் ஹன்சினி வெண்கலப் பதக்கம் பெற்றார். முதல் இரண்டு போட்டிகளில் எளிதாக வெற்றிபெற்ற அவர், அரையிறுதி போட்டியில் ரஷ்யாவின் இயூலியா புகோவ்கினாவுடன் மோதினார். அதில் 12-10, 9-11, 5-11, 8-11 என்ற செட் கணக்கில் மதன் ராஜன் ஹன்சினி தோல்வியடைந்ததால் வெண்கலம் கிடைத்தது.
இதையும் படிங்க:முதல் டெஸ்ட்: அணியைக் காப்பாற்ற போராடும் ரகானே!