ஃபார்முலா ஒன் கார்பந்தயம் என்பது உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளிலும் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான ஃபார்முலா ஒன் பந்தயம் 21 சுற்றுகளாக நடைபெறுகிறது. தற்போது இந்த பந்தயம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள சூழலில் நேற்று 16ஆவது சுற்றுப்போட்டி ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்றது.
நேற்றைய ரஷ்யன் கிராண்ட்ப்ரீ பந்தயத்தில் பல்வேறு ஃபார்முலா ஒன் கார்பந்தய வீரர்கள் கலந்துகொண்டனர். இந்த பந்தயத்தில் மெர்சிடிஸ் அணியைச் சேர்ந்த பிரிட்டன் வீரர் லூயிஸ் ஹாமில்டன், முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். அவர் மொத்த பந்தய தூரமான 309 கிலோ மீட்டரை 1 மணி நேரம் 33 நிமிடங்கள் 38 விநாடியில் கடந்து முதலிடம் பிடித்தார். அவரைத் தொடர்ந்து வந்த மற்றொரு மெர்சிடிஸ் வீரர் வேல்டெரி போட்டாஸ் இரண்டாவது இடமும், ஃபெராரி அணி வீரர் சார்லஸ் லெக்லார்க் மூன்றாவது இடமும் பிடித்தனர்.
பந்தயத்தில் சீறிப்பாய்ந்த ஹாமில்டனின் கார் அதுமட்டுமல்லாது நடப்பு சீசனில் பெல்ஜியம், இத்தாலி, சிங்கப்பூர் ஆகிய மூன்று பந்தயங்களில் தொடர்ச்சியாக ஃபெராரி அணி வெற்றி பெற்றது. அதற்கு நேற்றைய வெற்றியின் மூலம் ஹாமில்டன் முற்றுப்புள்ளி வைத்தார். இது ஹாமில்டனின் 82ஆவது சாம்பியன் பட்டமாகும். மேலும் நேற்றைய பந்தயத்தின் 52ஆவது சுற்றை 1:35.761 நிமிடத்தில் கடந்து புதிய சாதனையையும் அவர் படைத்தார்.
வெற்றிக்கோப்பையை முத்தமிடும் ஹாமில்டன் நடப்பு சீசனில் நடைபெற்றுள்ள 16 பந்தயங்களில் ஹாமில்டன் ஒன்பது வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் 322 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அதற்கு அடுத்தபடியாக மெர்சிடிஸ் அணி வீரர் வேல்டெரி போட்டாஸ் 249 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
நேற்றைய போட்டியின் தொடக்கத்தில் முதலிடத்தில் இருந்த ஃபெராரி அணி வீரர் வெட்டல், தனது அணி அளித்த உத்தரவை ஏற்காததால் 28ஆவது சுற்றில் கட்டாயமாக வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.