பவர் லிஃப்டிங்பெயரில் உள்ளது போல் பவர் கொடுத்து எடையை லிப்ட் செய்யும் போட்டி. உடலில் உள்ள பலத்தை அடிப்படையாகக் கொண்டு போராடும் போட்டி என்றாலும் மன வலிமையை மூலதனமாக வைத்து இந்தப் போட்டியில் தங்கம் வென்று தடம் பதித்துள்ளார் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த ஆரத்தி அருண். கனடாவில் இந்தாண்டு நடைபெற்ற காமன்வெல்த் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று, இவர் மொத்தம் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கே பெருமை தேடி தந்துள்ளார்.
அடிப்படையில் பல் மருத்துவரான இவர், மகப்பேறுக்குப் பின் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சிக் கூடத்தில் சேர்ந்த போதுதான் பவர் லிஃப்டிங் பயணத்தைத் தொடங்கியுள்ளார். ஒரு குடும்பப் பெண் இந்தப் போட்டியில் ஈடுபாட்டை செலுத்தியபோது அனைத்து தரப்பிலிருந்தும் வழக்கம்போல் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அந்த எதிர்ப்புகளை தனது நம்பிக்கை மூலம் கடந்து வந்துள்ளார் ஆரத்தி அருண்.
காலையில் பல் மருத்துவராகவும், பிற்பகலில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகவும் பயணித்துக் கொண்டிருக்கும் ஆரத்தி அருண், மாலையில் பவர் லிஃப்டராக புதிய பரிணாமத்தை எடுத்து தினமும் 3 மணிநேரம் பயிற்சி எடுத்துள்ளார். அதன் பலன், மூன்றே வருடங்களில் இந்தியாவுக்கு ஐந்து தங்கப்பதக்கங்களை பெற்றுத் தந்துள்ளார் இந்த வீர மங்கை, ஆரத்தி அருண் .
இவரது மகன் ஒரு கிக் பாக்சர் ஆவார். அவர், ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலம் வென்றவர். எனவே தனது தாய் நம்பிக்கையை இழக்கும் தருணங்களில் ஒரு மகனாகவும், விளையாட்டு வீரராகவும் பக்கபலமாக இருந்து ஆரத்தி அருணை ஊக்கப்படுத்தியுள்ளார்.