தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டேபிள்டென்னிஸ் உலகக்கோப்பை: இந்திய வீரருக்கு எழுந்து நின்று கைதட்டிய சீனர்கள்!

செங்குடுவில் நடைபெற்றுவரும் டேபிள்டென்னிஸ் உலகக்கோப்பை தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் நாக் அவுட் போட்டியில் ஜெர்மனி வீரர் டிமோ பாலுடன் இந்திய வீரர் சத்தியன் ஞானசேகரன் தோல்வியுற்றாலும், அவருக்கு சீனர்கள் எழுந்து நின்று கைத்தட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

Sathiyan
Sathiyan

By

Published : Dec 1, 2019, 7:08 PM IST

சர்வதேச டேபிள்டென்னிஸ் சம்மேளனம் சார்பில் இந்தாண்டிற்கான டேபிள்டென்னிஸ் உலகக்கோப்பை தொடர் சீனாவின் செங்குடுவில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்ற ஒரே இந்தியர் என்ற பெருமையை சென்னையைச் சேர்ந்த இந்திய வீரர் சத்யன் ஞானசேகரன் பெற்றார். அவர் பங்கேற்கும் முதல்டேபிள் டென்னிஸ் உலகக்கோப்பை இதுவாகும்.

முதல் சுற்றில் பிரான்ஸ் வீரர் சைமன் கெளஸியை அவர் 11-13, 9-11, 11-8, 14-12, 7-11, 11-5, 11-8 என 4-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார். இரண்டாம் சுற்றில், டென்மார்க்கைச் சேர்ந்த கிராத் ஜோனத்தானுடன் மோதிய அவர், 11-3, 12-10, 7-11, 16-14, 8-11, 11-8 என 4-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார். நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் அவர் முன்னாள் முதல்நிலை வீரர் ஜெர்மனியின் டிமோ பாலுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சத்யன் ஞானசேகரன் 11-7, 8-11, 5-11, 9-11,8-11 என 1-4 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார். சத்யன் ஞானசேகரனின் போராட்டமான ஆட்டத்தைப் பார்த்த சீன ரசிகர்கள் அவருக்கு நல்ல ஆதரவை தந்தனர். இது குறித்து சத்யன் ஞானசேகரன் தனது ட்விட்டர் பக்கத்தில்,

"போட்டி முடிந்தப் பிறகு, அரங்கத்திலிருந்த ஒட்டுமொத்த சீனர்களும் எனக்கு எழுந்துநின்று கைகளைத் தட்டி ஆதரவு தரும் போது, எனது முதல் டேபிள்டென்னிஸ் உலகக்கோப்பையில் நன்கு விளையாடியுள்ளேன் என்பதை நான் உணர்ந்தேன்" என பதிவிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து, மற்றொரு பதிவில், "இந்தத் தொடர் எனக்கு நல்ல அனுபவத்தை கற்றுகொடுத்துள்ளது. இந்தத் தொடரில் அனுபவமுள்ள வீரர்களிடம் அடுத்தடுத்து வெற்றிபெற்றதன் மூலம், எனது டேபிள்டென்னிஸ் பயணத்தில் நான் வெளிப்படுத்திய சிறந்த ஆட்டத்திறன் இதுவாகும். இதற்காக நான் எனது பயிற்சியாளர் ராமன், அமர்ஜித் சிங் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க:மல்யுத்தம் பயிற்சிபெற்ற ஐந்தே மாதங்களில் வெள்ளி வென்ற தமிழ்நாடு வீரர்!

ABOUT THE AUTHOR

...view details