ஜோர்டான் தலைநகர் அம்மானில் ஆசிய ஒலிம்பிக் குத்துச்சண்டை தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வீரர், வீராங்கனைகள் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவர்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற மகளிர் 51 கிலோ எடைப்பிரிவில் ஆறுமுறை உலக சாம்பியனான இந்தியாவின் மேரி கோம், நியூசிலாந்தின் டேமின் பென்னியுடன் மோதினார். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய மேரி கோம் 5-0 என்ற கணக்கில் வென்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இதைத்தொடர்ந்து, இன்று நடைபெறவுள்ள காலிறுதிச் சுற்றில் அவர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஐரிஷ் மாக்னோவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார். இதில், வெற்றிபெறும் பட்சத்தில் மேரி கோம் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவார் என்பதால் அவர் ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
முன்னதாக இந்தத் தொடரில் ஆடவர் பிரிவில் இந்திய வீரர்களான அமித் பங்கல் (51 கி.கி), விகாஸ் கிருஷ்ணன் (69 கி.கி), ஆசிஷ் குமார் (75 கி.கி), சச்சின் குமார் ( 81 கி.கி), சதீஷ் குமார் (91 கி.கி) ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கைப் பயணம்!