தமிழ்நாடு

tamil nadu

ஆறாவது பலான் டி ஆர் விருது யாருக்கு? மீண்டும் மோதும் மெஸ்ஸி - ரொனால்டோ

By

Published : Oct 22, 2019, 8:04 PM IST

இந்த ஆண்டின் பலான் டி ஆர் (Ballon d'or) விருதுக்கான பட்டியலில் பார்சிலோனாவின் மெஸ்ஸி, யுவென்டஸ் அணியின் ரொனால்டோ உள்ளிட்ட 30 வீரர்களின் பெயர் இடம்பெற்றுள்ளன.

Messi and Cristiano Ronaldo

ஐரோப்பாவில் சிறந்த கால்பந்து வீரருக்கு ஃபிரான்ஸ் கால்பந்து சம்மேளனம் சார்பில் பலான் டி ஆர் (Ballon d'or) விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டுவருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கு பார்சிலோனா அணியின் கேப்டன் மெஸ்ஸி, யுவென்டஸ் வீரர் ரொனால்டோ, லிவர்பூல் அணியின் டிஃபெண்டர் விர்ஜில் வான் டைக் உள்ளிட்ட 30 வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மெஸ்ஸி

முன்னதாக, இந்த ஆண்டு ஃபிபாவின் சிறந்த வீரருக்கான விருது இறுதிப் பட்டியலில் மெஸ்ஸி, ரொனால்டோ, வான் டைக் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அதில், மெஸ்ஸி ஆறாவது முறையாக ஃபிபாவின் சிறந்த வீரருக்கான விருதை வென்று அசத்தினார். கால்பந்து விளையாட்டில் மெஸ்ஸி, ரொனால்டோ இருவரும் தலைசிறந்த வீரர்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இருவரும் இந்த பலான் டி ஆர் விருதை தலா ஐந்துமுறை தன்வசப்படுத்தியுள்ளனர்.

பலான் டி ஆர் விருதுடன் ரொன்ல்டோ

மெஸ்ஸி 2009, 2010,2011, 2012, 2015 ஆகிய ஆண்டுகளில் இந்த விருதினை தட்டிச் சென்றார். மறுமுனையில், ரொனால்டோ 2008, 2013, 2014, 2016, 2017 என ஐந்து முறை இந்த விருதை பெற்றுள்ளார். இதனால், ஆறாவது முறையாக இந்த விருதினை இவர்களில் யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு கால்பந்து ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

அதேசமயம், இவ்விரு வீரர்களும் இந்த பலான் டி ஆர் விருதை 10 ஆண்டுகளுக்கு மாறிமாறி இவர்களே பெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு குரோஷியா அணியின் கேப்டனும், ரியல் மாட்ரிட் அணியின் மிட் ஃபீல்டருமான லூகா மாட்ரிக் இந்த விருதினை வென்றார்.

யூஏஃபா விருது வென்ற விர்ஜில் வான் டைக்

இதனிடையே, லிவர்பூல் அணியின் தடுப்பாட்டக்காரர் விர்ஜில் வான் டைக்கின் சிறப்பான ஆட்டத்தால் லிவர்பூல் அணி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது. யூஏஃபாவின் சிறந்த வீரருக்கான விருதை இவர் மெஸ்ஸி - ரொனால்டோ ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி வென்றார். இதனால், மீண்டும் ஒருமுறை வான் டைக் மெஸ்ஸி - ரொனால்டோவை ஓரம்கட்டி பலான் டி ஆர் விருது வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்படுகிறது.

மெஸ்ஸி, ரொனால்டோ, விர்ஜில் வான் டைக்

பெரும்பாலும் ஃபார்வர்ட் வீரர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது இம்முறை சற்றுமாறாக டிஃபெண்டர்களுக்கு வழங்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த விருது வழங்கும் விழா டிசம்பர் 3ஆம் தேதி பாரிஸில் நடைபெறவுள்ளது. பெரும்பாலும் மெஸ்ஸி, ரொனால்டோ, விர்ஜில் வான் டைக் இவர்களில் ஒருவருக்கு தான் இந்த விருது கிடைக்கும் என கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details