இந்தியன் பிரீமியர் லீக் என்றழைக்கப்படும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த சீசனில் முதல் ஆட்டத்தில் இருந்தே எதிர்பார்க்காத நிகழ்வுகள் பல அரங்கேறின. அந்த வகையில் நடப்பு சீசனின் ஆரம்பத்தில் தொடர் தோல்விகளைச் சந்தித்த சென்னையின் எஃப்சி அணி, தற்போது பிளே-ஆஃப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணியை அதன் சொந்த மண்ணில் சென்னையின் எஃப்சி எதிர்கொண்டது. இப்போட்டியில் ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் டிபென்சிவ் ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், முதல் பாதி ஆட்டம் கோல் இன்றி முடிந்தது.
பின்னர் தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்திலும் அதே நிலை நீடித்தது. அப்போது போட்டியின் 54ஆவது நிமிடத்தில் மும்பை வீரர் சவுரவ் தாஸ், தவறிழைத்ததால் அவருக்கு ரெட் கார்ட் அளிக்கப்பட்டது. இதனால் மும்பை அணி பத்து வீரர்களுடன் விளையாட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டது.
பின்னர் ஆட்டத்தின் 84ஆவது நிமிடத்தில் சென்னை அணிக்கு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அடிக்கப்பட்ட பந்தை லூசியன் கோயன் கோலாக மாற்றினார். இதன்மூலம் சென்னை அணியின் வெற்றி உறுதியானது. மேற்கொண்டு இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்காத நிலையில், இப்போட்டியில் சென்னையின் எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டியை வீழ்த்தியது.