இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுவன் பீம் கோயல் (8), அமெரிக்காவின் சியாட்டல் நகரில் வசித்துவருகிறார். பொதுவாக, தங்களது சொந்த நகரத்தைச் சேர்ந்த கால்பந்து கிளப் அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவுதான் பெரும்பாலான வீரர்களுக்கு சிறு வயதில் இருந்தே இருக்கும். அதுபோல, சியாட்டல் கால்பந்து அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை கோயலுக்கும் உள்ளது. ஆனால், இவர் லுக்குமியா ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே அந்த அணியில் விளையாட முடியாதோ என்ற கவலை அவரை வாட்டிவதைத்தது.
இந்திய சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய அமெரிக்க அறக்கட்டளை
லுக்குமியா என்ற ரத்தப் புற்றுநோயால் பாதிப்படைந்த இந்தியாவைச் சேர்ந்த எட்டு வயது சிறுவனின் ஆசை அமெரிக்காவின் மேக் ஏ விஷ் அறக்கட்டளை நிறைவேற்றியுள்ளது.
இந்நிலையில், சியாட்டல் சவுண்டர்ஸ் - ப்ரோஷியா டார்ட்மண்ட் (ஜெர்மனி) அணிகளுக்கு இடையே நடைபெற்ற நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி சியாட்டலில் நடைபெற்றது. இதில், எட்டு வயதான பீம் கோயல் சியாட்டல் அணியின் கோல் கீப்பராக களமிறங்கினார். ஆட்டம் தொடங்கியபிறகு, சக வீரர்களுக்கு இவர் பந்தை பாஸ் செய்ததும் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்துநின்று கைகளை தட்டி அச்சிறுவனை பாராட்டினர்.
சில நிமிடங்கள் விளையாடிய பிறகு, இவர் தனது அணியின் மற்ற வீரர்களுடன் ஹை ஃபை தந்து, டிரெஸிங் ரூம் சென்றார். ஒன்பது வயது உட்பட்ட கால்பந்து தொடரில் சியாட்டல் அணிக்காக விளையாடி வரும் இவர் இதுவரை மூன்று கோல்கள் அடித்துள்ளார். இறுதியில் டார்ட்மன்ட் அணி இப்போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றாலும், இச்சிறுவன் விளையாடிய தருணம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் சிறுவனின் ஆசையை பூர்த்தி செய்த மேக் ஏ விஷ் அறக்கட்டளைக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.