இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது சீசனில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவின் ஏடிகே அணி, சென்னையின் எஃப்சி அணியை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்திலிருந்தே சென்னை அணி தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கியது. இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் ரஃபேல் கிலிவெலேரோ (Rafael crivellaro) ஆட்டத்தின் ஏழாவது நிமிடத்தில் கோலடித்து அணியின் கோல் கணக்கை தொடங்கிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து சென்னையின் ஆன்ட்ரே ஸ்கெம்ப்ரி (Andre Schembri) ,ஆட்டத்தின் 39ஆவது நிமிடத்தில் கோலடித்து அசத்தினார். அதன்பின் கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் ராய் கிருஷ்ணா ஆட்டத்தின் 40ஆவது நிமிடத்தில் கோலடித்து அசத்தினார்.
இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் சென்னையின் எஃப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதனையடுத்து தொடங்கிய ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோலடிக்க போராடி வந்தனர்.
அதன்பின் கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்தை சரியாகப் பயன்படுத்திய சென்னை அணியின் நெர்ஜியஸ் வால்ஸ்கிஸ் (Nerjius Valskis) 94ஆவது நிமிடத்தில் கோலடித்து சென்னை அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தார்.
இந்த வெற்றியின் மூலம் சென்னையின் எஃப்சி அணி 25 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் நீடித்து வருகிறது. மேலும் இந்த வெற்றியின் மூலம் இந்தாண்டு ஐஎஸ்எல் கால்பந்து தொடருக்கான பிளே ஆஃப் வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கால்பந்து: பார்சிலோனா வெற்றி!