ஆப்பிரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் ஃபிளாய்ட் உயிரிழந்ததையடுத்து நிறவெறிக்கு எதிரான குரல்கள் உலகமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. Black Lives Matter தலைப்பில் அமெரிக்காவில் நடந்துவரும் போராட்டத்திற்கு பலரும் ஆதரவளிக்கின்றனர்.
அந்த வகையில், தற்போது நடைபெற்றுவரும் இங்கிலீஷ் ப்ரிமியர் லீக் சீசனில் பங்கேற்கும் அனைத்து கிளப் அணிகளும் தங்களது வீரர்களின் ஜெர்சியில் பெயருக்கு மேல் Black Lives Matter என்ற வாசகத்தைப் பொறித்து இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மான்செஸ்டரில் உள்ள எதியாட் மைதானத்தில் நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி அணி, பர்ன்லி அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தால் ஆதிக்கம் செலுத்திய மான்செஸ்டர் சிட்டி அணி 5-0 என்ற கோல்கணக்கில் பர்ன்லி அணியை வீழ்த்தியது. மான்செஸ்டர் சிட்டி அணி சார்பாக ரியாத் மஹரேஸ், ஃபில் ஃபோடன் ஆகியோர் தலா இரண்டு கோல்களை அடித்தனர்.
இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பர்ன்லி ரசிகர்கள் வெள்ளையர்கள் உயிரும் முக்கியம் பர்ன்லி என்ற பேனரை வானில் பறக்கவிட்டனர். அவர்களது இந்த செயலால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்படுட்டது.
இது தொடர்பாக பர்ன்லி அணி வெளியிட்ட அறிக்கையில், இவர்களது இந்த செயலுக்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். பர்ன்லி ஃபுட்பால் கிளப் இதுபோன்ற செயல்களை ஊக்குவிக்காது. இதில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு போட்டியை நேரில் பார்க்க வாழ்நாள் தடையை வழங்க நாங்கள் முழுமையாக செயல்படுவோம் என குறிப்பிட்டுள்ளது.