டெல்லி: இந்தியா முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரிக்கும் சுழலில், கடந்த மே ஒன்றாம் தேதி முதல் 18 வயதை கடந்தவர்களும் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி, இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான இஷாந்த் சர்மா ஆகியோர் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.
தற்போது மும்பையில் வசித்து வரும் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இஷாந்த் சர்மாவும், அவரது மனைவி பிரதிமாவும் தடுப்பூசி மையத்தின் முன் தங்கள் செல்ஃபியை பதிவேற்றி, "கரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள தொழிலாளர்களுக்கும், தடுப்பூசியை பெறுவதற்கு உழைத்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தடுப்பூசியை செலுத்தவதற்கான வசதிகளும், நிர்வாகமும் சீரான முறையில் இயங்குவதைக் காண மகிழ்ச்சியளிக்கிறது. அனைவரும் விரைவில் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள வேண்டும்" என இஷாந்த் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.