டெல்லி: ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதிவரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இத்தொடரில் பங்கேற்கும் விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று (செப். 8) அறிவிக்கப்பட்டது.
இந்திய அணிக்கு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டி20 போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த டி20 போட்டியில் விளையாடினார். மேலும், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இடம்பெறாததால் அஸ்வின் பிளேயிங் லெவனில் இடம்பெறவும் வாய்ப்புள்ளது
ட்விட்டரை அதரவைத்த தோனி
மாற்று வீரர்களாக (STANDBY PLAYERS) ஸ்ரேயஸ் ஐயர், ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம்பெறவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொரு வீரரான நடராஜனும் அணியில் சேர்க்கப்படவில்லை.
இந்நிலையில், அணி தேர்வு குறித்தும், கட்டமைப்பு குறித்தும் பல கேள்விகளும், பதில்களும் குவிந்து வந்தாலும், இந்திய ரசிகர்களையும், வீரர்களையும் குதூகலிக்க வைக்கும் ஒரு அறிவிப்பும் நேற்று வெளியானது. இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டதுதான் நேற்றிலிருந்து சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது.
பிசிசிஐ வெளியிட்ட இந்திய அணியின் அறிவிப்பு ட்வீட்டை விட, தோனியை ஆலோசகராக அறிவித்த ட்வீட் தான் அதிக லைக்ஸையும், அதிக ரீ-ட்வீட்டூகளையும் பெற்றுள்ளதே அதற்கு சான்று.
இரண்டு மாத ப்ளான்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்தே தோனியிடம் இந்த ஆலோசகர் பணி குறித்து உரையாடியுள்ளார். இந்திய அணியின் ஆலோசகர் பணி குறித்தும், அதன் பொறுப்புகள் குறித்தும் தோனி ஜெய் ஷாவுடன் நன்றாக ஆலோசித்த பின்னர் தான் இப்பொறுப்புக்கு ஒப்புக்கொண்டதாக ஜெய் ஷா கூறியுள்ளார்.
தோனி குறித்த அறிவிப்பு அதிக லைக், ரீ-ட்வீட் தோனியின் ஒப்புதலுக்கு பிறகே, இந்திய கேப்டன் விராட் கோலி, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரிடம் தோனியை ஆலோசகராக நியமிப்பது பற்றி ஜெய் ஷா கூறியுள்ளார். இருவரும் இந்த திட்டத்திற்கு உடன்படவே பிற பிசிசிஐ அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலகக்கோப்பையோடு நிறைவடைய இருப்பதால், இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவே தோனியை சேர்த்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தோனி, விராட் கோலி, ரவி சாஸ்திரி ஆகிய இந்த மூவர் படை 2007ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணிக்கு உலகக்கோப்பையைப் பெற்றுத்தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷ்ன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹார், ரவி அஷ்வின், அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.
மாற்று வீரர்கள்:ஸ்ரேயஸ் ஐயர், ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார்
இதையும் படிங்க: டி20 உலகக் கோப்பை இந்திய அணி அறிவிப்பு - தோனிக்கு புதிய பொறுப்பு