டெல்லி: அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் , ரிதுராஜ் கேக்வாத் களமிறங்கினர்.
ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் பேட்ஸ்மேன்கள் சர்வ சாதாரணமாக பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினர், ரிதுராஜ் - கிஷான் ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்தது. அதன் பிறகு வந்த வீரர்களும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்ரேயாஸ் ஐயர் 27 பந்துகளில் 3 சிக்ஸருடன் 36 ரன்களும் , ரிஷப் பந்த் 16 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 29 ரன்களும் , 12 பந்துகளில் 2 பவுண்டரி , 3 சிக்ஸருடன் 31 ரன்களும் எடுத்தனர்.
திறம்பட ஆடிய இஷான் கிஷன் 48 பந்துகளில் 11 பவுண்டரி , 3 சிக்ஸருடன் 76 ரன்கள் விளாசினார். இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. இதையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையாத போதிலும் , தேவையான ரன் ரேட் கட்டுக்குள் இருந்ததால் பயமின்றி அடித்து ஆடினர்.
4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டஸன் - டேவிட் மில்லர் ஜோடி இந்திய பந்துவீச்சை சிதறடித்தனர். டேவிட் மில்லர் 22 பந்துகளில் அரை சதம் கடந்தார். டஸன் 29 ரன்களில் இருந்த போது கிடைத்த கேட்ச் வாய்ப்பை ஸ்ரேயாஸ் ஐயர் தவற விட்டார். அதுவே ஆட்டத்தின் போக்கையும் மாற்றியது. அவர் 46 பந்துகளில் 7 பவுண்டரி , 5 சிக்ஸர் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
5 பந்துகள் மீதம் இருந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா அணி 211 ரன்கள் இலக்கை எட்டியது. 31 பந்துகளில் 64 ரன்கள் விளாசிய டேவிட் மில்லர் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை வகிக்கிறது. அடுத்த போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெறுகிறது.