கொழும்பு :இலங்கையில் நடடைபெற்ற 23 வயதுக்குட்பட்டோருக்கான இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் அணி தொடரின் இறுதிப் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று (ஜூலை. 23) நடைபெற்றது. இதில் இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி இந்திய பந்துவீச்சை அடித்து ஆடி அதிரடியாக ரன் குவித்தது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் சைம் அயூப், சாஹிப் சாதா பர்ஹான் ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். சைம் அயூப் 59 ரன்களிலும், சாஹிப் சாதா பர்ஹான் 65 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய உமைர் யூசுப் 35 ரன்கள் எடுத்து அவுட்டாகினார்.
மறுபுறம் தயப் தாஹிர் அதிரடியாக விளையாடி பாகிஸ்தான் அணியின் ரன் வேகத்தை உயர்த்தினார். இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சொப்பனமாக விளங்கிய தயப் தாஹிர் பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு விரட்டி சதம் அடித்து அசத்தினார். 108 ரன்கள் விளாசிய தயப் தாஹிர் இறுதியில் அவுட்டாகி வெளியேறினார். 50 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்கு 352 ரன்கள் குவித்தது.
இந்தியா சார்பில் ரியான் பராக் , ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை எதிர்கொண்டு இந்திய வீரர்கள் களமிறங்கினர். தொடக்க வீரர்கள் சாய் சுதர்சன், அபிஷேக் ஷர்மா ஆரம்பம் முதலே அதிரடியாக் விளையாடி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
தொடக்க விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்த நிலையில், சாய் சுதர்சன் 29 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிக்கின் ஜோஸ்11 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா அரைசதம் தாண்டிய நிலையில் 61 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.
அடுத்தடுத்து களமிறங்கிய இந்திய வீரர்கள் நிஷாந்த் சந்து 10 ரன்கள், யாஷ் துல் 39 ரன்கள், ஜுரேல் 9 ரன்கள், ரியான் பராக் 14 ரன்கள் என் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். இறுதியில் 40 ஓவர்களில் 224 ரன்கள் மட்டும் எடுத்து இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியின் மூலம் மீண்டும் இளையோர் ஆசிய கோப்பையை பாகிஸ்தான் அணி தக்கவைத்துக் கொண்டது.
இதையும் படிங்க :Harmanpreet kaur: நடுவருடன் வாக்குவாதம்.. ஹர்மன்பிரீத் கவுருக்கு அபராதம்... ஐசிசி முடிவு?