இங்கிலாந்து - நியூசிலாந்து இடையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றுவருகிறது. முதல் இன்னிங்ஸில் 378 ரன்களை நியூசிலாந்து குவித்தது. அதிகபட்சமாக அணியின் தொடக்க வீரரான டிவோன் கான்வே 347 பந்துகளில் 200 ரன்களை விளாசினார்.
அதேபோல் அறிமுக வீரரான இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர் ஒல்லி ராபின்சன் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முதல் போட்டியில் ரசிகர்களைத் திக்குமுக்காட வைத்த ஒல்லி ராபின்சனுக்குப் பாராட்டு மழை குவிந்தது. இங்கிலாந்துக்கு கிடைத்த நட்சத்திர நாயகன் எனப் புகழத் தொடங்கினர்.
புகழைச் சரித்த ட்வீட்கள்
ஆனால், அவருக்குக் கிடைத்த பாராட்டு மழை, மாலைக்குள் ஓய்ந்துவிட்டது. ஏனென்றால், 8 ஆண்டுகளுக்கு முன்பு ஒல்லி ராபின்சன் பதிவிட்ட ட்வீட்கள், இனவெறியைத் தூண்டும்விதமாகவும், பாலியல் ரீதியாக சில வார்த்தைகளும் இடம்பெற்றிருந்ததுதான்.
இணையத்தில் பழச கிளறிவிளையாடும் நமது இணையவாசிகள், ஒல்லியின் ட்வீட்களை குறிப்பிட்டு அவரை உடனடியாக அணியிலிருந்து விலக்க வேண்டும் எனப் போர்க்கொடி தூக்க ஆரம்பித்தனர்.
மன்னிப்பு கேட்ட ஒல்லி
இவ்விவகாரம் விஷ்வரூபம் எடுத்திட, பிரச்சினையின் வீரியத்தைப் புரிந்துகொண்ட ஒல்லி, உடனடியாகச் செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடுசெய்தார்.
அப்போது பேசிய அவர், “விவரம் தெரியாத வயதில் அத்தகைய ட்வீட்களை வெளியிட்டுவிட்டேன். அதற்கு இப்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதுபோன்று, ட்வீட் செய்ததற்கு வெட்கப்படுகிறேன். நான் இனவெறியன் அல்ல என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
களத்தில் கிரிக்கெட் வாரியங்கள்
இருப்பினும், அவரது மன்னிப்பு ஏற்றுக்கொள்ளக்கூடாது என ட்விட்டரில் பலர் கருத்தைத் தெரிவித்தனர். அதேபோல, விளக்கத்தை ஏற்காத இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் இவ்விவகாரம் குறித்து அவசரமாக ஒன்றுகூடி விவாதித்தது.
சிறுவயது தவறால் சிக்கிக்கொண்ட இங்கிலாந்து வீரர் அறிமுக போட்டியிலே சஸ்பெண்ட்
மன்னிப்பை ஏற்றுக்கொள்ளாத கிரிக்கெட் வாரியம், அவரை அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. இதன் காரணமாக, அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் ஏழு மாதங்கள் வரை கிரிக்கெட் விளையாடத் தடைவிதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி - ரோஜர் பெடரர் விலகல்