தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

GT vs SRH: பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையுமா குஜராத்? - ஹைதராபாத் அணியுடன் மோதல்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் குஜராத் அணி, ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால், முதல் அணியாக குஜராத், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அதேநேரம் பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல வேண்டுமென்றால் ஹைதராபாத் அணி, வரும் 3 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

By

Published : May 15, 2023, 2:58 PM IST

ipl
ஐபிஎல்

அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் 62வது லீக் ஆட்டத்தில் இன்று (மே 15) குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. லீக் ஆட்டங்கள் இந்த வாரத்துடன் முடிவடைய உள்ள நிலையில், பிளே ஆஃப் வாய்ப்பை டெல்லி அணி இழந்துள்ளது. அடுத்த சுற்று வாய்ப்பில் 9 அணிகளும் நீடிக்கின்றன.

குஜராத் அணி 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில் 8ல் வெற்றி பெற்றுள்ளது. 4 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ள அந்த அணி 16 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. குஜராத் அணியின் ரன் ரேட் 0.761 ஆகும். ஹைதராபாத்தை அணியை வீழ்த்திவிட்டால், முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும். ஒருவேளை இனி வரும் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தால், நிலைமை சிரமமாகிவிடும்.

மும்பைக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த குஜராத் அணி, தோல்வியில் இருந்து மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் சாஹா, கில் ஆகியோர் கடந்த ஆட்டத்தில் சொதப்பிய நிலையில் ஃபார்முக்கு திரும்ப வேண்டும். கேப்டன் பாண்ட்யா, விஜய் சங்கர், மில்லர் நம்பிக்கை அளிக்கின்றனர். ஆல்ரவுண்டராக உருவெடுத்துள்ள ரஷித் கான் அணிக்கு வலுசேர்க்கிறார். ஷமி, அல்சாரி ஜோசப், மொகித் சர்மா சிறந்த பங்களிப்பை கொடுப்பது அவசியம்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது. இன்னும் அந்த அணி 3 போட்டிகளில் விளையாட உள்ளது. 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் அந்த அணி 14 புள்ளிகளைப் பெறும். எனினும், பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல வேண்டும் என்றால் பிற அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும்.

அந்த அணியின் ரன்ரேட் -0.471 ஆக உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் மார்க்ரம், கிளாசென், அன்மோல்ப்ரீத் சிங், அப்துல் சமத் நம்பிக்கை தருகின்றனர். பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், நடராஜன் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும். சுழற்பந்து வீச்சில் மயங்க் மார்க்கண்டே ஆறுதல் தருகிறார்.

ஆட்டம் எங்கே?: ஹைதராபாத் மற்றும் குஜராத் அணிகள் மோதும் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு, அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

குஜராத் உத்தேச அணி: சுப்மன் கில், சாஹா (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபிநவ் மனோகர், ராகுல் திவாட்டியா, ரஷித் கான், அல்சாரி ஜோசப், நூர் அகமது, முகமது ஷமி, மோகித் சர்மா.

ஹைதராபாத் உத்தேச அணி: அன்மோல்ப்ரீத் சிங், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, மார்க்ரம் (கேப்டன்), பிலிப்ஸ், கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், விவ்ராந்த் சர்மா, புவனேஸ்வர் குமார், மார்கோ ஜான்சென், மயங்க் மார்க்கண்டே, நடராஜன்.

ABOUT THE AUTHOR

...view details