மும்பை:15ஆவது ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சென்னை மும்பை, பெங்களூரு அணி ஆல்-டைம் சூப்பர் ஸ்டார் அணிகள் புள்ளிப்பட்டியலில் வீழ்ந்து கிடக்க, ராஜஸ்தான், கொல்கத்தா, குஜராத் ஆகிய அணிகள் தங்களின் ஆதிக்கத்தை தொடர்ந்து வருகின்றன. இதனால், ஒவ்வொரு போட்டியும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன. அதில், இன்றைய ராஜஸ்தான் - பெங்களூரு அணியின் போட்டியும் ஒன்று.
ஏலத்தில் கிடைத்த செல்வங்கள்:ராஜஸ்தான் அணி, மெகா ஏலத்தில் படிக்கல், ஹெட்மயர், போல்ட், அஸ்வின், சஹால், பிரசித் கிருஷ்ணா ஆகியோரை எடுத்ததிருந்தது. இதில், ராஜஸ்தான் அணியின் கணக்கு ஒரு சதவீதம் கூட பிசிறு தட்டவில்லை என்றுதான் கூற வேண்டும். போல்ட் - பிரசித் வேகக்கூட்டணி, அஸ்வின் - சஹால் சுழல்கூட்டணி என பந்துவீச்சு பக்காவாக இருந்தாலும், டெத் ஓவர்களில் பந்துவீச்சு சற்று முன்னேற்றம் காண வேண்டிய நிலையே உள்ளது.
டல் அடிக்கும் டெத் ஓவர் பவுலிங்: முதல் போட்டியில், நாதன் கோல்டர் நைல் உடன் களமிறங்கிய ராஜஸ்தான், அடுத்த போட்டியில் மூன்று வெளிநாட்டு வீரர்களை மட்டும் எடுத்து, நவ்தீப் சைனியை உள்ளே கொண்டு வந்தது. கடந்த போட்டியில் சைனி, கொஞ்சம் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார். எனவே, இந்த போட்டியில், சாம்சனும் சங்ககாராவும் (பயிற்சியாளர்) மீண்டும் கோல்டர் நைலுக்கு போவார்களா அல்லது சைனிக்கு மீண்டும் வாய்ப்பளிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
மிரட்டும் பேட்டிங் லைன்-அப்: ராஜஸ்தான் முதல் போட்டியில் 210 ரன்கள், 2ஆவது போட்டியில் 193 ரன்கள் என பேட்டிங்கில் அசூர பலத்துடன் காட்சியளிக்கிறது. ஓப்பனிங் அதிரடிக்கு ஜெய்ஸ்வால், இன்னிங்ஸ் செட்டருக்கு படிக்கல், அதிரடிக்கு சாம்சன், ஹெட்மயர், மேற்குறிப்பிட்ட அனைத்திற்கும் பட்லர் என ராஜஸ்தானின் பேட்டிங் லைன்-அப் எதிரணி பந்துவீச்சாளரை மூச்சு வாங்க வைக்கும்.
இந்தப்பக்கம், பெங்களூரில் மேக்ஸ்வெல் அணியுடன் இணைந்துவிட்டாலும் இன்றைய போட்டியில் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியே. ஹேசல்வுட் இன்னும் அணியுடன் இணையாததால் பந்துவீச்சு சற்று பலவீனமாக காணப்பட்டாலும் கொல்கத்தாவுடனான கடைசி போட்டியில் வெற்றி பெற்றது அந்த அணிக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது.