எப்போதும் போல் தொடரின் ஆரம்பத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மேல் பல்வேறு விமர்சனங்களும் கேலிகளும் ரசிகர் மத்தியில் வட்டமடித்து வந்தன. தற்போது அனைத்து விமர்சனங்களையும் மீறி புள்ளிப்பட்டியலின் உச்சத்தில் வீற்றிருக்கிறது ஆர்சிபி. இந்த பெருமைக்கு ஏபி டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல்லின் அபாரமான ஆட்டம் தான் காரணம் என்றும் கூறினாலும், இவர்களின் ஆட்டத்தையும் தவிர்த்து ஆர்சிபியின் தொடர்ச்சியான வெற்றிக்கு முக்கிய காரணம், மிரட்டும் டெத் ஓவர் பவுலிங் தான்.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட் செய்தது. அப்போது மும்பை அணிக்கு கிறிஸ் லின், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். மும்பை அணியின் அசைக்கமுடியாத மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, கைரன் பொல்லார்ட் ஆகியோர் வரிசையில் இருக்கும்போது ஸ்கோர் 200-ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக ஆர்சிபியின் இறுதிக்கட்ட பந்துவீச்சு பெரும் ஆச்சரியத்தை அளித்தது.
குறிப்பாக, ஹர்ஷல் பட்டேலின் துல்லியமான யார்க்கர்கள் தான் அன்றைய போட்டியில் ஆர்சிபிக்கு பிளஸ்பாய்ண்டாக அமைந்தது. இதன்மூலம் மும்பையை 159 ரன்களில் முடக்கி, தொடரின் தனது முதல் வெற்றியை ஆர்சிபி ருசித்தது.
அடுத்த இரண்டு போட்டிகளிலும் முதல் பேட்டிங்க் ஆடிய பெங்களூரு அணி, ஹைதராபாத்துடனும், கொல்கத்தாவுடனும் அதேபோல் கட்டுக்கோப்பாக பந்துவீசியதால் தான் வெற்றிபெற முடிந்தது.
ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணியோ தொடர்ந்து பேட்டிங்கில் பெரியளவில் சோபிக்கவில்லை. பட்லர், சாம்சன், மில்லர், மோரிஸ் என போட்டிக்கு ஒருவர் தான் அணிக்கு ரன்களை சேர்க்கின்றனர். ஒட்டுமொத்தமான வெளிப்பாட்டை ராஜஸ்தான் அளித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பந்துவீச்சில் கிறிஸ் மோரிஸ், சேதன் சக்காரியா, முஷ்தபிஷூர் ரஹ்மான், ஜெயதேவ் உனத்கட் என பலமாக உள்ளதால், அது ராஜஸ்தான் அணிக்கு சற்று நிம்மதியை அளிகிறது.