2013 ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்திற்கு பிசிசிஐ-யால் ஆயுள் தடை விதிக்கப்பட்டது. தடையை விலக்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். 2015ஆம் ஆண்டில், டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் ஸ்ரீசாந்தை விடுவித்தது. பிசிசிஐ விதித்த ஆயுள் தடையை 2018ஆம் ஆண்டில் கேரள உயர் நீதிமன்றம் நீக்கியத்துடன், அவருக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்தது.
இருப்பினும், அம்மாநில உயர் நீதிமன்றக் கிளை, ஸ்ரீசாந்த் விளையாடுவதற்கான தடை நீடிக்கும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக ஸ்ரீசாந்த் உச்ச நீதிமன்றத்தை நாடினார். கடந்த ஆண்டு மார்ச் மாதம், உச்ச நீதிமன்றம் அவரது குற்றத்தை உறுதி செய்தது. ஆனால் பிசிசிஐ தனது தண்டனையின் அளவைக் குறைக்கும்படி கேட்டுக்கொண்டது. கிரிக்கெட் வாரியம் அவரது ஆயுள் தடையை ஏழு ஆண்டுகளாக குறைத்தது. இது இந்த ஆண்டு ஆகஸ்டுடன் முடிவடைகிறது.
தனது உடற்திறனை நிரூபித்தால், கேரள ரஞ்சி அணியில் அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என அம்மாநில கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இந்நிலையில், வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு (ஐ.பி.எல்) திரும்ப விரும்புவதாக தெரிவித்துள்ளார். 2013 ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட இரண்டு வருடம் தடை விதிக்கப்பட்டது.
ஐபிஎல் போட்டிகளில் விளையாட விரும்புவதாக கூறியுள்ள ஸ்ரீசாந்த், "நான் தேர்வு செய்யப்பட்ட எந்த அணிக்காகவும் விளையாடுவேன். ஆனால் ஒரு கிரிக்கெட் ரசிகனாக, மென் இன் ப்ளூ மும்பை இந்தியன்ஸின் அணிக்காக விளையாட விரும்புகிறேன், மும்பை இந்தியன்ஸுக்காக விளையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தால், ஓய்வு அறையில் சச்சினிடம் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்" எனக் கூறினார். மேலும், ஐபிஎல் தொடரில் தோனியின் தலைமையில் அல்லது ஆர்.சி.பி யில் விளையாட விரும்புவதாகவும் கூறினார்.