தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வார்னர் - பெயர்ஸ்டோவ் காட்டடியில் வீழ்ந்த சென்னை!

ஹைதராபாத் : சென்னை அணிக்கு எதிரான போட்டியில் வார்னர் - பெயர்ஸ்டோவ் இணையின் அதிரடி ஆட்டத்தால் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றது.

வார்னர்

By

Published : Apr 17, 2019, 11:33 PM IST

12ஆவது ஐபிஎல் தொடரின் 33ஆவது லீக் போட்டியில் சென்னை - ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ரெய்னா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதல் பேட்டிங் ஆடிய சென்னை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் சேர்த்தது.

இதனையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக வார்னர் - பெயர்ஸ்டோவ் இணை களமிறங்கியது. இந்த இணை பவர்-பிளேயில் சென்னை அணியின் பந்துவீச்சை சிக்சரும் பவுண்டரியுமாக வெளுத்து வாங்கியது. வார்னர் 24 பந்துகளில் அரைசதத்தை கடந்து ருத்ர தாண்டவம் ஆடினார். இதனையடுத்து சாஹர் வீசிய பந்தில் 25 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

வார்னர்

இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் 3 ரன்களில் ஆட்டமிழக்க, ஹைதராபாத் அணி 7 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 71 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் விஜய் சங்கர் களமிறங்கி நிதானமாக ஆட, ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் பெயர்ஸ்டோவ் சிக்சர்களாக அடித்து நொறுக்கினார்.

பின்னர் நிதானமாக ஆடிய விஜய் சங்கர் 7 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய பெயர்ஸ்டோவ் அரைசதம் கடந்தார். பின்னர் ஹூடா - பெயர்ஸ்டோவ் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

வார்னர் - பெயர்ஸ்டோவ்

ஹைதராபாத் அணி வெற்றிபெற கடைசி 24 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இதனையடுத்து கரண் ஷர்மா வீசிய அடுத்த ஓவரின் முதல் மூன்று பந்துகளில் 7 ரன்கள் எடுக்கப்பட்டது. வெற்றிக்கு 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் ஹூடா ஆட்டமிழக்க, அடுத்த பந்தில் சிக்சர் அடித்து ஹைதராபாத் அணியை பெயர்ஸ்டோவ் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். ஹைதராபாத் அணி 16.5 பந்துகளில் 4 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது. இறுதிவரை ஆட்டமிழக்காத பெயர்ஸ்டோவ் 44 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தார்.

ABOUT THE AUTHOR

...view details