நியூசிலாந்து மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் உள்ள பெசின் ரிசர்வில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 460 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹென்ரி நிக்கல்ஸ் 174 ரன்களையும், பந்து வீச்சாளரான வாங்கனர் 66 ரன்களையும் எடுத்து அணியை வலுவான நிலைக்கு கொண்டுசென்றனர்.
இதனையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி, தொடக்கம் முதலே விக்கெட்டை இழந்து தடுமாற்றம் கண்டது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிய எதிர்முனையில் நிலைத்து நின்ற பிளாக்வுட் 69 ரன்கள் சேர்க்க மேற்கு இந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 131 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி ஃபாலோ ஆன் ஆனது. இதில், சிறப்பாக பந்து வீசிய நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெமீசன் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனைத்தொடர்ந்து, 329 ரன்கள் பின்தங்கிய நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணியால், 317 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதில், தொடக்க ஆட்டக்காரர் ஜான் கேம்பெல் (68), அணியின் கேப்டன் ஜெசன் ஹோல்டர் (61), ஜோஸ்வ டி சில்வா (57) ஆகியோர் அரைசதம் அடித்து இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க முயற்சித்தனர்.
இருப்பினும், நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வெற்றிப்பெற்றது.