திருவனந்தபுரம்:இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் கடந்த 23ஆம் தேதி தொடங்கியது. முதல் போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இத்தொடரின் 2வது போட்டி நாளை (நவ. 26) திருவனந்தபுரம் கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.
இதற்காக இரு அணி வீரர்களும் திருவனந்தபுரத்தை சென்றடைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணியை பெருத்தவரை முதல் போட்டியில் மிகவும் நெருக்கமான வெற்றியையே பெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 208 ரன்கள் குவித்தது.
இந்திய அணியின் பந்து வீச்சில் முகேஷ் குமார் மற்றும் அக்சர் படேலை தவிர்த்து மற்ற பந்துவீச்சாளர்களின் எக்கானமி செயல்படு என்பது 10க்கும் மேலேயே இருந்தது. குறிப்பாக, ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் இங்கிலிஸுக்கு எதிராக லெக் ஸ்பின்னர் ரவி பிஸ்னாய் சற்று தடுமாறினார். ஆகையால் அவரது பந்து வீச்சின் அணுகுமுறையில் வித்தியாசம் தேவை.
பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ரிங்கு சிங் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும், இஷான் கிஷன் பேட் செய்கையில் டாட் பால்களை குறைப்பதை நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும். அது அணியின் வேகத்தை தக்கவைத்து கொள்ள உதவும்.
மறுபக்கம், ஆஸ்திரேலிய அணியை பொருத்தவரை, பேட்டிங்கில் ஜோஸ் இங்கிலிஸ் அதிரடியான அட்டத்தை வெளிப்படுத்தி சர்வதேச முதல் சதத்தை பதிவு செய்தார். பெரிதாக ஸ்டீவ் ஸ்மித் ஓப்பனிங்கில் விளையாடியதில்லை என்றாலும், தனது பணியை சிறப்பாக செய்தார். அவரின் உறுதுணையே அந்த அணியின் ஸ்கோரை 200 ரன்களை கடக்க உதவியது.