தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IND vs SL: இலங்கையை கதறவிட்ட தீபக் சஹார்; மீண்டும் தொடரை இழந்தது இலங்கை

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், தீபக் சஹார் 69 ரன்கள் அடித்து இந்திய அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார்.

IND vs SL
IND vs SL

By

Published : Jul 21, 2021, 2:10 AM IST

கொழும்பு : இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நேற்று (ஜூலை 20) நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் ஷனாகா பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இலங்கை இன்னிங்ஸ்

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 275 ரன்களை சேர்த்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக அவிஷ்கா 50, அசலங்கா 65, கருணாரத்ன 44 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார், சஹால் 3 விக்கெட்டுகளையும், தீபக் சஹார் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்திய அணி 276 ரன்கள் என்ற சற்றே பெரிய ஸ்கோரை துரத்தியது. முதலில் அதிரடியாக ஆடி வந்த ஷா - தவான்கூட்டணியை, ஹசரங்கா தன் சுழல் ஜாலத்தில் உடைத்தார். ஹசரங்கா பந்துவீச்சில் பிருத்வி ஷா 13 (10) ரன்களிலும், அறிமுக வீரர் கசுன் ரஜிதாபந்துவீச்சில் இஷான் 1 (2) ரன்னிலும் காலியானார்கள்.

பாதியில் கைவிட்ட மிடில் ஆர்டர்

தொடர்ச்சியான விக்கெட் வீழ்ச்சிக்கு பின் சற்று தடுமாறி வந்த தவானை 29 (38) ரன்களில் ஹசாரங்கா விக்கெட் எடுத்தார். இதன்பின், களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், மனீஷ் பாண்டே உடன் ஜோடி சேர்ந்து சற்று ஆறுதல் அளித்தார்.

இந்த ஜோடி 32 பந்துகளில் 50 ரன்கள் பாட்னர்ஷிப்பை அமைத்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக மனீஷ் பாண்டே 37 (31) ரன்களில் ரன் அவுட்டானார். அடுத்து வந்த ஹர்திக்கும் டக்-அவுட்டானார். இருப்பினும், மறுமுனையில் சூர்யகுமார் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். சூர்யகுமார் 53 (44) ரன்களில் எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேற இந்தியாவை டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முழுவதுமாக கைவிட்டனர்.

கைவிட்ட குர்னால்

இதன்பின் வெற்றிக்கு 116 ரன்கள் தேவைப்பட்டது. குர்னால் பாண்டியா ஆட்டத்தை இறுதிவரை கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் 35 (54) ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.

இந்தியாவின் கடைசிக்கட்ட பேட்ஸ்மேன்கள் குறித்து கிரிக்கெட் உலகத்திற்கே தெரியும் என்பதால், போட்டி எப்போது முடியும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், அத்தனை பேரின் எதிர்பார்ப்பையும் தவிடிப்பொடியாக்கியது சஹார் - புவனேஷ்வர் இணை.

இறுதி நிமிடங்கள்

இருவர் விக்கெட்டையும் கடைசிவரை வீழ்த்த முடியாமல், சொதப்பலாக பந்துவீசி பல பவுண்டரிகளை வாரி வழங்கினர். கடைசி 7 பந்தில் 7 ரன்கள் வேண்டிய நிலையில் புவனேஸ்வர் பவுண்டரி அடிக்க இந்திய கூடாரமே குதூகலமானது. அடுத்த பந்தை சஹாரும் பவுண்டரிக்கு விரட்ட இந்திய அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.

இந்திய அணி 49.1 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்களை எடுத்து, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இந்திய அணி தரப்பில் தீபக் சஹார் 69 (82) ரன்களுடனும், புவனேஷ்வர் குமார் 19 (28) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை அணி பந்துவீச்சில் ஹசரங்கா 3 விக்கெட்டுகளையும், ரஜிதா, சந்தகன், ஷனாகா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடரை வென்றது இந்தியா

இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 – 0 என்ற கணக்கில் வென்றுள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) நடைபெறுகிறது.

ஆட்டநாயகன்: 2 விக்கெட்டுகள், 69 ரன்கள் எடுத்த தீபக் சஹார்

ABOUT THE AUTHOR

...view details