தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

AUS vs AFG: அதிவேக இரட்டை சதம்.. தனி ஆளாக போராடி ஆஸி., அணியை கரை சேர்த்த மேக்ஸ்வெல்!

ICC World Cup 2023: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் நட்சத்திர வீரர் மேக்ஸ்வெல் தசைப்பிடிப்பையும் பொருட்படுத்தாமல் களத்தில் நின்று அணிக்கு வெற்றியை தேடித் தந்தார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 10:55 PM IST

மும்பை: உலகக் கோப்பை 39வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் விக்கெட்டுக்கு 38 ரன்கள் சேர்த்த நிலையில், குர்பாஸ் 21 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்துக் களமிறங்கிய ரஹ்மத் சத்ரானுடன் ஜோடி சேர்ந்து நிலைத்து நின்று ஆடினார்.

ஆப்கானிஸ்தான் 121 ரன்கள் எடுத்திருந்த போது ரஹ்மத் 30 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து வந்த சஹிதி ஸ்டார்க் பந்தில் 26 ரன்களுக்கு அவுட்டானார். ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் சத்ரான் தூணாக நின்றார். 143 பந்துகளில் 129 ரன்கள் எடுத்தார். உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனை படைத்தார்.

மறுபக்கம் அசமத்துல்லா 22, நபி 12 சத்ரானுக்கு நல்ல கம்பெனி கொடுத்தனர். கடைசி நேரத்தில் ரஷித் கான் நாலா பக்கமும் பவுண்டரிகளாக சிதறடித்தார். ரஷித் கான் 18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். 292 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. டிராவிஸ் ஹெட் ரன் எடுக்காமல் அவுட்டானார். அடுத்துக் களமிறங்கிய மார்ஷ் சற்று நேரம் தாக்குப்பிடித்த நிலையில் நவீன் உல் ஹக்கின் அபார பந்திவீச்சில் எல்பிடபில்யூ முறையில் அவுட்டானார்.

ஃபார்மில் இருக்கும் வார்னர் அதிரடி காட்டுவார் என எதிர்பார்த்த நிலையில் அசமத்துல்லா பந்தில் 18 ரன்களுக்கு போல்டானார். அடுத்துக் களமிறங்கிய ஆஸ்திரேலியா பேட்ஸ்மென்கள் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து அவுட்டாகினர். ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் எளிதில் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், மேக்ஸ்வெல், கம்மின்ஸ் ஜோடி பொறுமையாக அணியை மீட்டெடுத்தது.

91 ரன்களுக்கு 7 விக்கெட் என இருந்த அணியை மேக்ஸ்வெல் தனது அதிரடியால் ஆட்டத்தைப் போக்கை மாற்றினார். காலில் தசை பிடிப்பு காரணமாக நிற்க கூட முடியாத நிலையிலும், பவுண்டரிகளாக அடித்தார். மறுமுனையில் கம்மின்ஸ் நல்ல கம்பெனி கொடுத்தார். இறுதியில் மேக்ஸ்வெல் 128 பந்துகளில் 201 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணியை ஒற்றை ஆளாகக் கரை சேர்த்தார்.

இதில் 21 பவுண்டரிகளும், 10 சிக்சர்களும் அடங்கும். கம்மின்ஸ் 68 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் அணி கடைசி வரை போராடி தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியா அணி இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இதையும் படிங்க: "ஆடம் ஜம்பாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு" - ஆரோன் பிஞ்ச்!

ABOUT THE AUTHOR

...view details