தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 9, 2019, 1:57 PM IST

ETV Bharat / sports

CWC 19: ஹாட்ரிக் வெற்றியை பதிவுசெய்த நியூசிலாந்து!

டவுன்டான்: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றைய லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.

williamson

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில், டவுன்டான் நகரில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில், நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

இப்போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று ஆப்கானிஸ்தான் அணியை பேட்டிங் ஆட பணித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, நியூசிலாந்து பவுலர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 41.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஹஸ்மத்துல்லா ஷாகிடி 59 ரன்கள் எடுத்தார். நியூசி. பந்துவீச்சில் ஜேம்ஸ் நீஷம் 5, ஃபெர்குசன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் கப்தில் முதல் பந்திலேயே டக்-அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அதன் பின் காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன் ஆகியோர் ரன் குவிப்பில் ஈடுபடத் தொடங்கினர். காலின் முன்ரோ 22 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த ராஸ் டெய்லரும் தன் பங்கிற்கு வெளுத்து வாங்கி, 48 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் நியூசிலாந்து அணி 32.2 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கான 173 ரன்களை எட்டியது. நியூசி. கேப்டன் வில்லியம்சன் 79 ரன்னிலும், டாம் லாதம் 13 ரன்களிலும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் அப்தப் ஆலம் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி நடப்பு தொடரில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதேபோன்று ஆடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியுற்றதால், ஆப்கானிஸ்தான் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details