உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி இதுவரை இரண்டு போட்டிகளில் ஆடி இரண்டிலும் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், இன்று இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடந்த போட்டியில் தவானின் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு மூன்று வாரம் ஓய்வு தேவை என மருத்துவர் அறிவுறுத்தியதால் அவர் விலகியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்த தவான், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடி தனது 17 சர்வதேச ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். மேலும், மூன்று உலகக்கோப்பை சதங்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை படைத்தார்.
அப்போட்டியில் இந்திய அணி 352 ரன்களை எட்டியதற்கு தவான் அமைத்து தந்த சிறப்பான அடித்தளம் என்றே பலரும் புகழாரம் சூட்டினர். தற்போது அவர் விலகியுள்ளது இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் அவருக்கு பதிலாக இளம் வீரர்கள் ரிஷப் பந்த் தேர்வு செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.