இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின.
கார்டிஃப் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூ ப்ளஸிஸ் முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 34.1 ஓவர்களில் 125 ரன்களுக்கு சுருண்டது. தென்னாப்பிரிக்க அணி தரப்பில் இம்ரான் தாஹிர் நான்கு, கிறிஸ் மோரிஸ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனிடையே மழை குறுக்கிட்டதால், டக்வொர்த் லூவிஸ் முறைப்படி 127 ரன்கள் இலக்குடன் ஆட தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது.
தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய தென்னாப்பிரிக்கா அணியின் டி காக் ஒருநாள் போட்டிகளில் தனது 23ஆவது அரைசதத்தைப் பதிவு செய்தார். முதல் விக்கெட்டுக்கு டி காக் - ஆம்லா ஜோடி 101 ரன்கள் சேர்த்த நிலையில், டி காக் 68 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய ஆல் - ரவுண்டர் பெலுக்வாயோ, ஆம்லாவுடன் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 28.4 ஓவர்களில் 131 ரன்கள் எடுத்து டக் வொர்த் லூவிஸ் முறைப்படி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த உலகக்கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு இது முதல் வெற்றியாகும். இப்போட்டியின் ஆட்டநாயகனாக இம்ரான் தாஹிர் தேர்வு செய்யப்பட்டார்.