ஆஸ்திரேலியாவில் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில், குரூப் ஏ பிரிவில் இந்தியா, குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறின. இந்நிலையில், இன்று மெல்போர்னில் நடைபெற்ற இந்தத் தொடரின் 18ஆவது போட்டியில் குரூப் ஏ பிரிவில் உள்ள நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்துடன் மோதியது.
இவ்விரு அணிகளும் இந்தத் தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி என தலா நான்கு புள்ளிகளை எடுத்திருந்தது. இதனால், இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் என்பதால், இப்போட்டி இரண்டு அணிகளுக்குமே வாழ்வா சாவா போட்டியாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து, இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, தொடக்க வீராங்கனை பெத் மூனியின் சிறப்பான பேட்டிங்கால் 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அன்னா பீட்டர்சன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.