இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில், 140 கிலோ எடை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரஹீம் கார்ன்வால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக எடையுடன் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இவர், 1920இல் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் வார்விக் ஆர்ம்ஸ்டராங்கின் சாதனையை (139 கிலோ) முறியடித்துள்ளார்.
#INDvWI: வெயிட்டு காட்டிய வெயிட்டான வெஸ்ட் இண்டீஸ் வீரர்!
ஜமைக்கா: டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக எடையுடன் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை வெஸ்ட் இண்டீசின் ரஹீம் கார்ன்வால் என்பவர் படைத்துள்ளார்.
இப்போட்டியில், டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணியில் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கத்தில், சற்று தடுமாறி வந்த கேஎல் ராகுல் 13 ரன்களில்ஹோல்டரின் பந்துவீச்சில் அறிமுக வீரர் ரஹீம் கார்ன்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் வந்த புஜாரா ரஹீம் கார்ன்வாலின் பவுலிங்கில் ஆறு ரன்களுடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதன்மூலம், தன்னுடைய அறிமுக போட்டியிலேயே சிறப்பாக பந்துவீசியும் விக்கெட் எடுத்தும் கெத்து காட்டியுள்ளார் ரஹீம் கார்ன்வால். தற்போது, இந்திய அணி முதல்நாள் உணவு இடைவேளை வரை இரண்டு விக்கெட்டுகளை இழந்து 72 ரன்களை எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 41 ரன்களுடனும், கோலி ஐந்து ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.