சிபிஎல் எனப்படும் கரீபியன் ப்ரீமியர் லீக் தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற ஏழாவது லீக் போட்டியில் கெயில் தலைமையிலான ஜமைக்கா தல்வாஸ் அணி, கார்லோஸ் பிராத்வெயிட் தலைமையிலான செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணியை எதிர்கொண்டது.
இதில், முதலில் பேட்டிங் செய்த ஜமைக்கா தல்வாஸ் அணியில் கிறிஸ் கெயில், ஷட்விக் வால்டன் இருவரும் சிக்சர்கள் மழையாக பொழிந்து ரன்களை உயர்த்தினர். இந்த ஜோடி 162 ரன்கள் சேர்த்த நிலையில், வால்டன் 36 பந்துகளில் 73 ரன்களுக்கு அவுட் ஆனார். அதில், மூன்று பவுண்ட்ரிகளும், எட்டு சிக்சர்களும் அடங்கும்.
மறுமுனையில், அதிரடியாக விளையாடிய கெயில் 62 பந்துகளில் ஏழு பவுண்ட்ரி, 10 சிக்சர்கள் என 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டி20 போட்டியில் கெயில் அடிக்கும் 22ஆவது சதம் இதுவாகும். இதனால், ஜமைக்கா அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 241 ரன்களைக் குவித்தது.
இதைத்தொடர்ந்து, 242 ரன்கள் என்ற இமாலய ரன் இலக்குடன் பேட்டிங் செய்த செயிண்ட் கிட்ஸ் அணியில் டேவான் தாமஸ் (71), எவின் லூயிஸ் (53) ஆகியோர் அணிக்கு நல்ல தொடக்கத்தைத் தந்தனர். இதனால், செயிண்ட் கிட்ஸ் அணி 18.5 ஓவர்களிலேயே ஆறு விக்கெட்டுகளை இழந்து 242 ரன்களை எட்டியதால், இப்போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்மூலம், டி20 போட்டிகளில் இரண்டாவது அதிகபட்ச ரன்களை சேஸிங் செய்த அணி என்ற சாதனையை செயிண்ட் கிட்ஸ் அணி படைத்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 245 ரன்களை சேஸ் செய்தது தான் அதிகபட்ச ரன் சேஸாகும்.
அதுமட்டுமில்லாமல், இப்போட்டியில் இரு அணி வீரர்களும் மொத்தம் 37 சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களுக்கு வானவேடிக்கையை நிகழ்த்தியுள்ளனர். இதனால், டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் பதிவான போட்டிகளின் வரிசையில், இப்போட்டி முதலிடத்தை சமன் செய்துள்ளது. முன்னதாக ஆப்கானிஸ்தான் ப்ரிமீயர் லீக்கில், லெஜெண்ட்ஸ் - கபுல் ஸ்வனன் அணிக்கு இடையிலான போட்டியில் 37 சிக்சர்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.