ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 1990களிலும், 2000களிலும் 300 ரன்களை சேஸ் செய்த போட்டிகளின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். இதுவே 2008க்குப் பிறகு தற்போதுவரை இந்தநிலைமை முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது. அதற்கு டி20 போட்டியின் வருகை, பேட்ஸ்மேன்களுக்கு சாதமாக விதிமுறையும் ஆடுகளமும் இருப்பதுதான் காரணம் என்பது வேறுகதை.
பேட்ஸ்மேன்களுக்கு சாதமாக விதிமுறைகள் இருந்தாலும், 300-க்கும் மேற்பட்ட ரன்களை பலமுறை சேஸ் செய்வது பேட்ஸ்மேன்களுக்கே உரித்தான சவால்தான். இந்தச் சவாலில் பலமுறை வெற்றிபெற்றவர் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் கோலி. சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 316 ரன்கள் இலக்கை இந்திய அணி 49ஆவது ஓவரில் எட்டியது. இதில், கோலி 83 பந்துகளில் 85 ரன்கள் அடித்திருந்தார்.
சேஸ் மாஸ்டர்
இந்திய அணி 10 போட்டிகளில் 300-க்கும் மேற்பட்ட ரன்களை வெற்றிகரமாக எட்டியுள்ளது. அதில் கோலி ஏழு சதம், ஒரு அரைசதம் என இதுவரை 993 ரன்களை குவித்து தான் சேஸ் மாஸ்டர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக்காட்டினார். தனது சிறப்பான பேட்டிங்கால் கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த வீரராகவும், சேஸ் மாஸ்டராகவும் தற்போது அவர் உச்சம் தொட்டிருந்தாலும் அதற்கான முதல் படியை அவர் கடந்துவந்து இன்றோடு 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இந்த 10 ஆண்டுகளில் கோலியின் சிறந்த இன்னிங்ஸ் எது என்று ரசிகர்களிடம் கேட்டால், பெரும்பாலானோர் 2012இல் இலங்கை அணிக்கு எதிராக அவர் 83 பந்துகளில் விளாசிய 133 ரன்களைத்தான் கூறுவர். 320 ரன்களை 40 ஓவர்களில் சேஸ் செய்ய வேண்டும் என்பது ஒருபக்கம் இருந்தாலும், சிறந்த பேட்ஸ்மேன்களை தனது யார்க்கர் பந்துகளால் திணறடித்த மலிங்காவின் ஒரே ஓவரை கோலி 24 ரன்கள் அடித்த காரணத்தையும் அவர்கள் முன்வைப்பர்.
ஆனால், இந்தப் போட்டிக்கு முன்னதாகவே கோலி மலிங்காவின் பந்துவீச்சை துவம்சம் செய்துள்ளார். 2009 இலங்கை அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.