மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது லீக் போட்டி பெர்த்தில் இன்று நடைபெற்றது. இதில், குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி, கத்துக்குட்டி அணியான தாய்லாந்தை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தாய்லாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில், அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 78 ரன்களை மட்டுமே எடுத்தது. விக்கெட் கீப்பர் நன்னாபத் கொன்சாரேன்கை (33), நருமோல் சாய்வாய் (13) ஆகியோரைத் தவிர மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்கு ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கேப்டன் ஸ்டாஃபைன் டெய்லர் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
79 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 17ஆவது ஓவரில் மூன்று விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தாய்லாந்து அணியை வீழ்த்தியது.