தமிழ்நாடு

tamil nadu

ஜாகிருக்கு ஸ்மித், ஹர்பஜனுக்கு பாண்டிங்... பந்துவீச்சாளர்களது ஃபேவரைட் விக்கெட்டாக இருந்த பேட்ஸ்மேன்கள்!

கரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், சர்வேதச கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களதுப் பந்துவீச்சில் அதிகமுறை ஆட்டம் இழந்த ஐந்து பேட்ஸ்மேன்கள் குறித்து பார்ப்போம்.

By

Published : Apr 7, 2020, 6:34 PM IST

Published : Apr 7, 2020, 6:34 PM IST

Stats: Five high-profile bowlers and their bunnies
Stats: Five high-profile bowlers and their bunnies

கிரிக்கெட்டில் ஒரு சில பேட்ஸ்மேன்களுக்கு ஒரு சில பந்துவீச்சாளர்களைக் கண்டாலே ஆகாது. சிறப்பான ஃபார்மில் இருந்தாலும் கூட பேட்ஸ்மேன்கள், குறிப்பிட்ட பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் தொடர்ந்து அதிகமுறை ஆட்டம் இழந்திருப்பதை நாம் பார்த்திருப்போம்.

தற்போது அந்தப் பந்து வீச்சாளர்களதுப் பந்துவீச்சில் அதிகமுறை ஆட்டம் இழந்த ஐந்து பேட்ஸ்மேன்கள் குறித்து பார்ப்போம்.

மெக்ராத் vs மைக் ஆதர்டன்:

கடந்த 1990களின் இறுதிக் கட்டத்தில், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைசிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேனாகத் திகழ்ந்தவர் மைக் ஆதர்டன். சொந்த மண்ணாக இருந்தாலும் சரி, அந்நிய மண்ணாக இருந்தாலும் சரி, எதிர் அணிகளை வெளுத்துவாங்கிய இவர், மெக்ராத் என்றால் மட்டும் பெட்டி பாம்பாய் அடங்குவிடுவார்.

மெக்ராத் vs மைக் ஆதர்டன்

மெக்ராத் இருந்த காலக்கட்டத்தில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கியதுதான் இவருக்கு பெரும் சவாலாக இருந்துள்ளது. ஆனாலும், இந்த சவால்களில் மெக்ராத்தே அதிகமுறை வெற்றி வாகைச் சூடியுள்ளார். 17 போட்டிகளில் இவ்விரு வீரர்கள் நேருக்கு நேர் மோதியுள்ளனர்.

அதில் மெக்ராத் 19 முறை ஆதர்டனின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். சராசரியாக ஒவ்வொரு போட்டிக்கும் மெக்ராத் ஆதர்டனை ஒருமுறையாவது அவுட் செய்துள்ளார். இதில், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மெக்ராத் பந்துவீச்சில் ஆதர்டனின் பேட்டிங் ஆவரேஜ் 9.89 மட்டுமே.

ஜாகிர் கான் vs கிரேம் ஸ்மித்:

ஜாகிர் கான் vs கிரேம் ஸ்மித்

தென் ஆப்பிரிக்க அணியின் சிறந்த கேப்டனாக விளங்கிய கிரேம் ஸ்மித் பலமுறை ஜாகிர் கான் பந்துவீச்சில், பெவிலியனுக்கு நடையைக் கட்டியுள்ளார். இவர்கள் இருவருக்குள் நடைபெற்ற சவால்களில் ஜாகிர் கானே அதிகமுறை வென்றுள்ளார். இதுவரை 25 முறை இவர்கள் நேருக்கு நேர் மோதியுள்ளனர்.

அதில், 13 முறை கிரேம் ஸ்மித், ஜாகிர் கான் பந்துவீச்சில்தான் ஆட்டம் இழந்துள்ளார். தனது கிரிக்கெட் பயணத்தில், ஜாகிர் கான் குறிப்பிட்ட பேட்ஸ்மேன்களை அதிகமுறை அவுட் செய்த பட்டியலில், கிரேம் ஸ்மித்தான் முதலிடத்தில் உள்ளார்.

ஹர்பஜன் சிங் vs ரிக்கி பாண்டிங்:

இந்திய சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்கிற்கும், ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் ஆகவே அகாது. அது கிரிக்கெட்டிலும் சரி, வாக்குவாதத்திலும் சரி. அதேசமயம், டெஸ்ட் போட்டிகளில் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணிக்கு தலைவலியாக ஹர்பஜன் சிங் இருந்துள்ளார்.

குறிப்பாக 2001 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரை ரிக்கி பாண்டிங் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார். அந்தத் தொடரில் அவர் ஐந்து இன்னிங்ஸில் விளையாடி 17 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அதில், ஐந்து முறையும், அவர் ஹர்பஜன் சிங் பந்துவீச்சிலே ஆட்டமிழந்தார்.

ஹர்பஜன் சிங் vs ரிக்கி பாண்டிங்:

அனைத்துவிதமான போட்டிகளிலும் சேர்த்து, இதுவரை இவ்விரு வீரர்கள் 14 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் ரிக்கி பாண்டிங் 10 முறை ஹர்பஜன் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு பந்துவீச்சாளர் அதிகமுறை அவுட் செய்து இதுவே அதிகமுறையாகும்.

ஸ்டெயின் vs முகமது ஹபிஸ்:

தலைசிறந்த பந்துவீச்சாளராகத் திகழும் தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெயின் பந்துவீச்சில் கதிகலங்கி ஆட்டமிழக்காத பேட்ஸ்மேன்களே இல்லை. அதில், அதிகமுறை பாகிஸ்தான் வீரர் முகமது ஹபிஸ் ஆட்டமிழந்துள்ளார். முகமது ஹபிஸுக்கு எதிராக, 2007 ஆம் ஆண்டு கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் தொடங்கிய ஸ்டெயினின் ஆதிக்கம், 2013ஆம் ஆண்டு உச்சத்தில் இருந்தது.

ஸ்டெயின் vs முகமது ஹபிஸ்

இதுவரை 28 முறை ஸ்டெயின் பந்துவீச்சை எதிர்கொண்ட முகமது ஹபிஸ், 15 முறை ஆட்டம் இழந்துள்ளார். அதில், 2013 ஆம் ஆண்டு மட்டுமே 10 முறை அவர் ஸ்டெயின் பந்துவீச்சில் நடையைக் கட்டியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில், ஒரு ஆண்டில் ஒரு பேட்ஸ்மேனை அதிகமுறை அவுட் செய்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஸ்டெயின் படைத்துள்ளார்.

டிம் சவுதி vs கோலி:

யானைக்கும் அடி சறுக்கும் என்பதைப் போல நவீன கிரிக்கெட்டின் ரன்மேஷினாகத் திகழும் கோலியும், ஒரு சில பந்துவீச்சாளர்களது பவுலிங்கில் அடி சறுக்கியுள்ளார். குறிப்பாக, நியூசிலாந்து அணியின் டிம் சவுதி பந்துவீச்சுக்கு விடை கிடைக்காமல் கோலி அதிகமுறை ஆட்டமிழந்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரும் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

கோலி vs டிம் சவுதி

அனைத்து விதமான போட்டிகளையும் சேர்த்து, கோலியை டிம் சவுதி 10 முறை ஆட்டம் இழக்கச் செய்துள்ளார். இதன்மூலம், கோலியை அதிகமுறை அவுட் செய்த பந்துவீச்சாளர்களின் பட்டியலில் அவர் முதலிடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க:90ஸ் கிட்ஸ்களின் பவுலிங் ஹீரோ ஜாகிர் கான் ❤

ABOUT THE AUTHOR

...view details