தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பயிற்சிக்கு திரும்பிய ஸ்ரீசாந்த்

மேட்ச் ஃபிக்ஸிங் விவகாரத்தில் தண்டனை குறைக்கப்பட்ட பின், இந்திய வீரர் ஸ்ரீசாந்த் வலை பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Sreesanth

By

Published : Aug 22, 2019, 4:10 AM IST

கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த், டிராவிட் தலைமையிலான இந்திய அணியில் முன்னணி பந்துவீச்சாளராக திகழ்ந்தார். பின்னர், 2007 டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இதைத்தொடர்ந்து, 2013 ஐபிஎல் தொடரில் இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும்போது மேட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டில் சிக்கினார்.

இதனால், பிசிசிஐ இவருக்கு 2013இல் ஆயுட் காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஸ்ரீசாந்த் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், அவரது தண்டனையை குறைப்பது குறித்து பரிசீலிக்கும் படி பிசிசிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், பிசிசிஐ மத்தியஸ்தராக நியமித்துள்ள ஓய்வு பெற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.கே.ஜெயின், இவரது ஆயுட்கால தண்டனையை ஏழு வருடங்களாக குறைத்து உத்தரவிட்டார். இதனால், அடுத்த ஆண்டு இவரது தண்டனை காலம் முடிந்தவுடன் இவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடலாம் என அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, 'கடவுளின் ஆசிர்வாதத்தால் எனது தண்டனைக்காலம் குறைக்கப்பட்டது. எனது தடை அடுத்த ஆண்டு முடிந்தவுடன் இந்திய அணிக்காக விளையாடுவேன் என எதிர்பார்க்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றுவது எனது கனவு' என ஸ்ரீசாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இவர் வலைப்பயிற்சியில் பந்துவீசும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆறு ஆண்டுகளாக விளையாடாமல் இருந்தபோதிலும், உங்களது வேகம் குறையவில்லை என அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர். தற்போது ஸ்ரீசாந்தின் இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணிக்காக ஸ்ரீசாந்த் 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 87 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல், 53 ஒருநாள் போட்டிகளில் 75 விக்கெட்டுகளும், 10 டி20 போட்டிகளில் ஏழு விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details