ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு வீரர் இரட்டை சதம் அடிப்பாரா என்ற கேள்வி நீண்ட காலமாக நிலவிவந்தது. ஜிம்பாப்வே வீரர் கோவன்ட்ரி, பாகிஸ்தானின் சயீத் அன்வர் ஆகியோர் 194 ரன்களை அடித்து இரட்டை சத இலக்கை எட்டிவிட முடியும் என்ற நம்பிக்கையை ரசிகர்களுக்கு அளித்ததே இதற்கு முக்கிய காரணம். இருப்பினும் அவர்களால் அந்த இலக்கை எட்ட முடியாததால் யார் அந்த இரட்டை சத சாதனையை நிகழ்த்த போகிறார்கள் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இதுபோன்ற சூழலில், சாதனைகளின் நாயகனான சச்சின் டெண்டுல்கர், கடந்த 2010ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசி தனது சாதனை புத்தகத்தில் மட்டுமல்லாது உலக கிரிக்கெட்டின் சாதனை புத்தகத்திலும் ஒரு புதிய பட்டியலை உருவாக்க காரணமாக அமைந்தார்.
அதன்பின் அவரது சாதனையை யாரால் முறியடிக்க முடியும் என்ற கேள்வி எழுந்த நிலையில், 2011 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய முதல் போட்டியில் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் விரேந்திர சேவாக்கிற்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அப்போட்டியில் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சேவாக் இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48ஆவது ஓவரிலேயே 175 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினார் சேவாக். அவர் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் அன்றே அவர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்திருப்பார்.
ஆனால், சேவாக் போன்ற அன் ஆர்த்தடெக்ஸ் பேட்ஸ்மேன்களுக்கு இது ஒரு பெரிய விஷயமல்ல. அதேபோன்று சேவாக்கிற்கு டிசம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. இம்முறை வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட சேவாக் வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சை சிதறடித்து இலக்கை நோக்கி பயணிக்கத் தொடங்கினார்.
அவர் அப்போட்டியில் சந்தித்த முதல் பந்தில் பவுண்டரி அடித்த சேவாக், அதன்பின் ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரிகள் அடித்து ரன்களை உயர்த்தினார். அவர் கம்பீர் உடன் ஜோடி சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 176 ரன்கள் குவித்து அதகளப்படுத்தினார். அதன்பின்பும் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் அனைவரையும் சோதனை செய்த விரேந்திர சேவாக், மைதானத்தில் நங்கூரம் பாய்ச்சியதுபோல் நின்று கொண்டு பின்னிப் பெடலெடுத்தார்.