ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது நான்கு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய அணி எட்டு விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதனிடையே இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (டிச.26) மெல்போர்னில் நடைபெறுகிறது. இந்நிலையில் விராட் கோலி - அனுஷ்கா தம்பதியினருக்கு குழந்தை பிறந்ததன் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து இந்தியக் கேப்டன் விராட் கோலி விடுப்பு எடுத்துள்ளார். அவருக்குபதிலாக அஜிங்கியே ரஹானே அணியை வழிநடத்தவுள்ளார்.
இந்நிலையில், இந்திய அணியின் கேப்டனாக செயல்படவுள்ள ரஹானே குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், “ரஹானே இதற்கு முன்பும் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். களத்தில் அவர் மிகவும் அமைதியான நபர். அதற்கென்று அவர் ஆக்ரோஷமானவர் இல்லை என்று அர்த்தமல்ல. ஒவ்வொருவருக்கும் தங்களது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்த வெவ்வேறு சூழ்நிலைகள் உள்ளது. ஏன் கோலியைப் போன்ற ஆக்ரோஷத்தை ரஹானேவும் வெளிப்படுத்தியுள்ளார்.
உதாரணத்திற்கு புஜாரா மிகவும் அமைதியான ஒருவர். அவர் எப்போதும் களத்தில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியது கிடையாது. அதனால் அவர் மற்றவர்களைவிடக் குறைந்துவிட்டாரா? இல்லை. அவர் தனது பணியை சிறப்பாகதான் செய்துவருகிறார். அதுபோல் தான் ஒவ்வொருவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்கது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்த தனி வழியை வைத்துள்ளனர்.
அவர்களின் பாணி வெவ்வேறாக இருப்பினும் இலக்கு ஒன்றுதான். அந்த இலக்கு இந்தியாவிற்கு வெற்றியை தேடித் தருவது. அதனால் ரஹானேவும் வித்தியாசமான யுக்திகளையும், அணியை வழிநடத்துவதற்கான வழியையும் வைத்திருப்பார். அதாவது அணியை எவ்வாறு வழிநடத்துவது, மைதானத்தில் எப்படி விளையாடுவது, பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் எந்தெந்த மாற்றங்களை செய்வது ஆகியவை அடங்கும்.
இவை அனைத்து ஒருங்கிணைந்து செய்யப்படும் வேளையில் வெற்றி நிச்சயமாகக் கிடைக்கும். அணியில் மூத்த வீரர்கள் இல்லை என்பதால், எந்த மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை. அவர்களுக்கு பதிலாக மற்றொருவருக்கு அந்த வாய்ப்பானது கிடைக்கும். அதனால் நாம் தனித்தனியாக சிந்திக்காமல், ஒரே அணியாக சிந்திக்க வேண்டும். வீரர்கள் வேண்டுமெனில் காயமடைந்து தொடரிலிருந்து வெளியேறலாம், ஆனால் இந்திய அணி எப்போதும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'சாதிப்பதற்கு தாய்மை தடையில்லை' - 10 கி.மீ, 62 நிமிடம்... வியக்க வைத்த கர்ப்பிணி