ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த சில ஆண்டுகளாக மோசமான ஆட்டத்திறனை வெளிப்படுத்திவருகிறது. குறிப்பாக, இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், அந்த அணி விளையாடிய ஒன்பது போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பதிவு செய்து ஒன்பதாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இந்திய அணிக்கு எதிரான தொடரையும் 0-2 என இழந்தது. 2015 முதல் 2019 வரை ஜேசன் ஹோல்டர் 86 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். அதில், 24 வெற்றி 54 தோல்விகளைப் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், ஒருநாள் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக ஜேசன் ஹோல்டர், டி20 போட்டியின் கேப்டன் பிராத்வொயிட் ஆகியோரை கேப்டன் பொறுப்பிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நீக்கியது. டி20, ஒருநாள் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் புதிய கேப்டனாக பொல்லார்டு இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை கருத்தில் கொண்டுதான் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேசமயம், வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான பொல்லார்டு கடந்த மூன்று ஆண்டுகளாக ஒருநாள் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடிக்காமல் இருந்தார். அவர் இறுதியாக, 2016இல் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில்தான் விளையாடினார். இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 62 டி20, 101 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர் மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.