உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் மிக முக்கிய ஆட்டத்தில் இன்று வங்கதேசத்துடன் மோதியது. 500 ரன்கள் அடித்து 50 ரன்னில் எதிரணியைச் சுருட்டினால் மட்டுமே அரையிறுத்துக்குள் செல்ல முடியும் என்ற நிலை உருவானது. ஆட்டத்திற்கு முன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அஹமது 500 ரன்கள் அடிப்போம் எனக் கூறியிருந்ததால் பரபரப்புத் தொற்றிக்கொண்டது.
பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி
லண்டன்: வங்கதேச அணியுடன் மோதிய பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி பெற்றாலும் அரையிறுதிக்குள் செல்ல முடியாமல் உலகக்கோப்பைத் தொடரை விட்டு வெளியேறியது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் ஃபக்கர் ஜமான் 13 ரன்னில் வெளியேறினார். இமாம் உல் ஹக்-பாபர் அசாம் இணை சிறப்பாக விளையாடி ரன் குவித்தது. நன்றாக விளையாடிய இமாம் 100 ரன்களும் பாபர் அசாம் 96 ரன்களும் எடுத்தனர். ஹபீஸ் மற்றும் வாசிம் தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்திலே நடையைக் கட்டினர்.
500 ரன்கள் அடிக்க திட்டமிட்ட பாகிஸ்தானால் 315 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. வங்கதேச அணித் தரப்பில் ரஹ்மான் 5 விக்கெட்களை வீழ்த்தினார். கடினமான இலக்கை எதிர்த்து ஆட வந்த வங்கதேச அணி வீரர்களில் ஷஹிப் அல் ஹசன் மற்றும் தாஸ் தவிர யாரும் அதிக ரன்கள் அடிக்கவில்லை. அதிகபட்சமாக ஷஹிப் அல் ஹசன் 64 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் பந்துவீச்சாளர் நன்றாகப் பந்து வீசி 6 விக்கெட்களை கைப்பற்றினார். இறுதியில் பாகிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.